மாணவிகள் தற்கொலை சம்பவம்: தலைமை ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம்
By DIN |
Published on : 26th November 2017 04:08 AM
அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகள் 4
பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக,
சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள்
போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு
ஆசிரியை ஆகிய இருவரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 மாணவிகள் பிளஸ் 1 படித்து வந்தனர். இந்த 4 மாணவிகளும் சரியாகப் படிக்காததால் வகுப்பாசிரியை, அவர்கள் 4 பேரையும் வெள்ளிக்கிழமை திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து மாணவிகள் 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாணவிகளின் தற்கொலைக்கான காரணங்களை அறிய, கல்வித் துறையினரும், காவல் துறையினரும் தனித் தனியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். மேலும், பள்ளியில் ஆசிரியைகளிடம் ஏடிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், சனிக்கிழமை மாணவிகளின் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்ய முயன்ற போது, அவர்களின் உறவினர்கள் மற்றும் பனப்பாக்கம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து கல்வித் துறையிடம் இருந்த அறிக்கை பெற்ற ஆட்சியர், சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவர், பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பாசிரியை மீனாட்சி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியை லில்லியையும் பணியில் இருந்து நிறுத்த உத்தரவிடப்பட்டது. இத்தகவல் போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாணவிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
கடையடைப்பு: மாணவிகளின் தற்கொலை சம்பவத்தை அடுத்து பனப்பாக்கம் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் இயங்கவில்லை.
சாலை மறியல்: பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவிகளின் சடலங்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தனித் தனியாக அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பனப்பாக்கம் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
பனப்பாக்கம் நகர எல்லையில் வந்த போது, அமரர் ஊர்திகளை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மண்டலச் செயலாளர் ரத்தினநற்குமரன், வடக்கு மாவட்டச் செயலாளர் கெளதமன், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் அன்புக்கரசி பிரபாகரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இறந்த மாணவிகள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். 2 ஏக்கர் நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் (பொறுப்பு) அப்துல் மூனீர், அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
எம்எல்ஏ நேரில் ஆறுதல்: இறந்த 4 மாணவிகளின் வீடுகளுக்கும் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன், என்.டி.பி.தயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ சு.ரவி கூறியதாவது: இறந்த மாணவிகள் குடும்பத்தினரின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment