சபரிமலையில் அறைகள் பெறுவது எப்படி?
Added : நவ 18, 2017 22:27
சபரிமலை:சபரிமலையில் தங்க விரும்பும் பக்தர்கள், அறைகளை, 'ஆன் - லைன்' மூலமாகவும், நேரடியாகவும் பெற முடியும்.கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மதியம், 12:00 மணிக்கு பின், நெய்யபிஷேகம் கிடையாது. இதனால், மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள், அங்கு தங்க வேண்டிய நிலைஏற்படுகிறது.
இவ்வாறு தங்கும் பக்தர்களுக்கு, ஆன் - லைன் மூலமும், அலுவலகம் மூலம் நேரடியாகவும் அறைகள் வழங்கப்படுகின்றன.
ஆன் - லைன் மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள், www.onlinetdb.com என்ற இணையதளம் மூலம் அறைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, அறைகளை முன்பதிவு செய்ய முடியும்.
அல்லாத பட்சத்தில், சன்னிதானத்தில், கோவிலின் இடது பக்கம் பாண்டி தாவளம் செல்லும், 108 படிக்கட்டு அருகே அமைந்துள்ள அலுவலகத்தில், நேரடியாக அறைகள் பெற முடியும்.
எல்லா நாட்களிலும், மாலை, 4:00 மணி முதல், அறைகள் பெற முடியும். இந்த கவுன்டரில், முன்பதிவு வசதி கிடையாது. 12, 16 மணி நேரம் என, இரு பிரிவுகளில் அறைகள் கிடைக்கும்.
திடீர் நெரிசல்: பக்தர் காயம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்ட போது, வடக்கு வாசல் வழியாக செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், மீடியா சென்டருக்கும், வடக்குவாசல் க்யூ காம்ப்ளக்ஸ் அமைந்துள்ள கட்டடத்துக்கும் இடையே, கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில், ஒரு டிராக்டரும் சிக்கியது. பக்தர்கள் எந்த பக்கமும் நகர முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, கூடுதல் போலீசார், மத்திய அதிவிரைவு படை போலீசாரும் வந்து கூட்டத்தை சரி செய்து, டிராக்டரை விடுவித்தனர். அதன்பின், கூட்டம் சிறிது சிறிதாக குறைந்தது. இந்த நெரிசலில், ஒருவர் காயமடைந்தார்.
பக்தர் படத்துடன், 'ஸ்டாம்ப்'
சபரிமலையில், மாளிகைப்புறம் கோவிலின் கீழ் பகுதியில், சன்னிதானம் போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ், பக்தர்களுக்கும், இங்குள்ள ஊழியர்களுக்கும், மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போது மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், போஸ்ட் ஆபீசின் தேவை குறைந்து விட்டது. இதனால், சபரிமலைக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, இங்குள்ள போஸ்ட் ஆபீசில், 300 ரூபாய் செலுத்தினால், சன்னிதான பின்னணி படத்தில், பக்தர் படத்துடன் ஸ்டாம்ப் பிரின்ட் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக, பக்தரின் புகைப்படம் அங்கேயே எடுக்கப்படுகிறது. ஐந்து ரூபாய் மதிப்பில், 12 ஸ்டாம்புகள் பிரின்ட் செய்து கொடுக்கப்படும். இதை, தபால் அனுப்பவும், கண்காட்சியில் வைக்கவும், நினைவாக பாதுகாத்து வைக்கவும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment