Sunday, November 19, 2017


முக்கிய நகரங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள்


Added : நவ 19, 2017 00:58

சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால், பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 50 சிறப்பு பஸ்களும், பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில், 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சபரிமலை சீசன் துவங்கி உள்ளதை அடுத்து, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து, பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்களின் இயக்கம், நேற்று முன்தினம் முதல் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் இருந்து, 10 பஸ்களும், திருச்சி, மதுரையில் இருந்து தலா, இரு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பக்தர்களின் டிக்கெட் முன்பதிவு, வருகைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை, சென்னையில் இருந்து, 20 ஆகவும், பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை, 10 ஆகவும் உயர்த்தி, இரு மார்க்கங்களிலும், 50 பஸ்கள் வரை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்களின் இயக்கம் துவக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, 54 முன்பதிவு மைங்கள், www.tnstc.com இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். குழுவாக செல்ல விரும்பும் பக்தர்கள், தாங்கள் பயணிக்கும் நகரத்தில் உள்ள கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டால், அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

குழுவாக பயணிப்போருக்கு, டிக்கெட்டில் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி சலுகை உண்டு. ஐந்து பேர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்தாலும், சிறப்பு சலுகையை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எஸ்.இ.டி.சி.,யை தவிர, மதுரை, நெல்லை, கோவை, விழுப்புரம் கோட்டங்கள் சார்பில், 100 சிறப்பு பஸ்கள், பம்பை, குமுளிக்கு இயக்கப்படுகின்றன.
அது தவிர, தமிழகத்தின் புனித தலங்களான, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024