'கேன்சர்' சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி., நிறுவனம் அறிவிப்பு
Added : நவ 18, 2017 20:04
சென்னை:புற்று நோயால் பாதிக்கப்பட்டோர், சிகிச்சை பெறுவதற்காக, எல்.ஐ.சி., எனப்படும், 'லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்,' 'எல்.ஐ.சி., கேன்சர் கவர்' என்ற, சிறப்பு காப்பீட்டு திட்டத்தை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, சென்னையில், அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் தாமோதரன் கூறியதாவது:
ஏழை மக்கள பலர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பணம் இன்றி சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்க, 'எல்.ஐ.சி.,யின் கேன்சர் கவர்' என்ற காப்பீட்டு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. அதில், 20 வயது முதல், 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 2,400 ரூபாய், 'பிரீமியம்' செலுத்தி, 10 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை, காப்பீடு எடுக்கலாம்.
முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, பிரீமியம் தொகை உயர்த்தப்படாது.இதில், மற்ற காப்பீட்டு திட்டங்களில் இருப்பது போல, இறப்பு அல்லது முதிர்வு காலத்திற்கு பின், காப்பீடு முதிர்வு தொகை வழங்கப்படாது. அதற்கு பதில், புற்று நோய்க்கு சிகிச்சை பெற, நிதி உதவி செய்யப்படும்.
அதன்படி, புற்று நோய் துவக்க நிலையில் கண்டறியப்பட்டால், அதற்கு சிகிச்சை பெற, காப்பீடு தொகையில், 25 சதவீதம் உடனே தரப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பிரீமியம் செலுத்த தேவையில்லை. புற்று நோய் இறுதி கட்டத்தில் இருந்தால், அப்போது சிகிச்சை பெற, காப்பீடு செய்த மொத்த தொகையும் முழுவதும் வழங்கப்படும். அதில், 1 சதவீத தொகை, மாதம் தோறும், 10 ஆண்டுகளுக்கு தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment