Sunday, November 5, 2017

மாநில செய்திகள்

ரூ.5.70 கோடி மோசடி புகாரில் சென்னையில், பிரியாணி கடை அதிபர் கைது

சென்னையில் ரூ.5.70 கோடி மோசடி புகாரில், பிரியாணி கடை அதிபர் ஆசிப் அகமதுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நவம்பர் 05, 2017, 04:15 AM

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். பைனான்சியரான இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், ஆசிப் பிரியாணி லிமிடெட் இயக்குனர் ஆசிப் அகமது(வயது 45) என்னிடம் ரூ.5 கோடியே 70 லட்சம் கடன் பெற்றார். நான் கொடுத்த கடனை திரும்ப கேட்ட போது, ஆட்களை வைத்து என்னை கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் என்னிடம் சமரசம் பேசி ரூ.2 கோடிக்கு வரைவோலை வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது, அது போலி என்று தெரிய வந்தது. எனவே ஆசிப் அகமது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிப் அகமது மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஆசிப் அகமதுவை தேடி வந்தனர். இந்தநிலையில் தூத்துக்குடியில் ஆசிப் அகமதுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.

விசாரணைக்கு பின்னர் ஆசிப் அகமது சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடி புகார் தொடர்பாக ஆசிப் அகமதுவின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024