Sunday, November 5, 2017

தொடர்மழை பாதிப்பு : தாம்பரத்தில் மேலும் ஒரு கட்டுப்பாட்டு அறை


By DIN  |   Published on : 05th November 2017 02:25 AM  
தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாட்டு அறை சேவை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பேரிடர் மேலாண்மை மையம்) கடந்த 4 நாள்களுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. 
கட்டுப்பாட்டு அறைக்கு, நாள்தோறும் குடியிருப்பு, கல்விக் கூடங்கள், நிறுவனப் பகுதியிலிருந்து அவசர கால தொலைபேசி எண்கள் மூலம் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அதன்படி, மழைநீர் சூழ்ந்த பகுதிகளான, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுகுன்றம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அழைப்புகள் வருகின்றன. அதன்படி, இதுவரை 370-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, பொதுமக்களின் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இதற்காக, கட்டுப்பாட்டு அறையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள், பாதிக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்காணிப்பதற்காக தொலைக்காட்சி செய்திகள், கணினி, வாக்கி-டாக்கி, தொலைபேசி (காஞ்சிபுரம்: 044-25619299) உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களுடன் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் 3 குழுவினர் சுழற்சி முறை அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர்.
தாம்பரத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை: தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் புதிதாக கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. இதில், 04422410050, 9445051077 என்ற எண்களில் மழை பாதிப்புள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 
நிவாரண முகாம்கள்: மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்போரூர் பஞ்சம்திருத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 3 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள இடத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லலாம் என மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024