Thursday, November 9, 2017


ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.ஐ வசம்.. குற்றவாளிகள் சிக்குவார்களா.?
சி.ய.ஆனந்தகுமார் என்.ஜி.மணிகண்டன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் சிக்குவார்களா என்கிற எதிர்பார்ப்பு ராமஜெயம் ஆதரவாளர்களிடையே கூடியுள்ளது.




ராமஜெயம் கொல்லப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகக் காவல் துறை, அவரின் கொலைக்கான காரணத்தைக்கூடக் கண்டுபிடிக்கவில்லை.

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தில்லை நகர் பகுதியில் வாக்கிங் போனவர், திருச்சி திருவளர்ச்சோலை அருகே கைகால்கள் கட்டப்பட்டுப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் தொழில் போட்டி அல்லது அரசியல் விரோதம் அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக நடந்துள்ளதா எனத் தமிழகப் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக அளவில் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கு முதலில், திருச்சி மாநகரப் போலீஸாருக்கும் அடுத்து, சி.பி.சி.ஐ.டி-க்கும் மாற்றப்பட்டது. அதற்கென 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனாலும், சி.பி.சி.ஐ.டி போலீஸாரால், எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 10.12.214 அன்று, ‘ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என அவரது மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 33 மாதங்களுக்கு மேலாக, பல கட்டங்களாக, "குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். கால அவகாசம் தேவை" என அடுத்தடுத்து நீதிமன்றத்தில் அவகாசம் வாங்கினர். அடுத்து ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்துத் துப்புக் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ராமஜெயம் கொலை வழக்கில், இதுவரை மொத்தம் 1,100 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராமஜெயம், வாகனத்தில் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்த போலீஸார் திருச்சியைச் சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் விசாரணைகள் மேற்கொண்டனர். அதில், சந்தேகப்படக்கூடிய வகையான 294 வாகன உரிமையாளர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2,910 கைப்பேசி எண்கள் பட்டியலிடப்பட்டு அவற்றைப் பயன்படுத்துவோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2007-ம் ஆண்டு வையம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் உள்ளிட்ட இருவர் மர்மமாக காரில் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்ததுபோல இந்த வழக்கிலும் தகுந்த துப்புக் கிடைத்ததும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள்” என்றார்.

இந்நிலையில், இன்று ராமஜெயம் கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி, அவகாசம் கேட்டார்.

இதனையடுத்து கோபமடைந்த நீதிபதி, '' ‘இதுதான் கடைசி’ என ஒவ்வொருமுறையும் அவகாசம் கேட்கிறீர்கள். இதுவரை 12 முறைகளுக்கு மேலே அவகாசம் கேட்டுவிட்டீர்கள். ஒவ்வொருமுறையும் உறையிட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தாலும், வழக்கில் எந்தவித மாற்றமும் இல்லை. இனியும், நீங்கள் இந்த வழக்கை விசாரிப்பதில் சரியாக இருக்காது' என்ற நீதிபதி, ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதுடன், வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்'' எனவும் உத்தரவிட்டார்.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு இத்தனை வருடங்கள் ஆன பின்பும் தமிழகப் போலீஸாரால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒருபக்கம் என்றாலும், மறுபக்கம் தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ வசம் மாறியுள்ளது.

இதனால் குற்றவாளிகள் சிக்குவார்களா என்கிற எதிர்பார்ப்பு ராமஜெயம் ஆதரவாளர்களிடையே கூடியுள்ளது.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...