ஓட்டுரிமை! வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு...
சட்ட திருத்தம் இயற்ற மத்திய அரசு முடிவு
புதுடில்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில் ஓட்டளிக்கும் வகையில், சட்ட திருத்தம் இயற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பிரதிநிதி அல்லது மின்னணு ஓட்டுச்சீட்டு முறை மூலம், அவர்கள் ஓட்டளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள யோசனையையும், மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உட்பட பல நாடுகளில், இந்தியர்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஓட்டளிக்கும் உரிமையில்லை. தங்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொடர்ந்து கோரி வருகின்றனர்.
பொது நல மனு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், வெளிநாடு வாழ் இந்தியரான, ஷம்ஷீர் என்பவர் தாக்கல் செய்த, பொது நல மனுவில் கூறியிருந்த தாவது: பல்வேறு நாடுகளில், ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆனால், இந்திய தேர்தல்களில் ஓட்டளிக்கும் உரிமை, இவர்களுக்குவழங்கப்படவில்லை.
வெளி நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டின ருக்கு, 114 நாடுகள், ஓட்டுரிமை வழங்கி உள்ளன. இதில், ஆசியாவைச் சேர்ந்த, 20 நாடுகள் அடங்கும். இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பெரும் பங்கு உள்ளது. வெளிநாடுகளில் வசித்தாலும், இந்திய அரசியலில் தான், அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. அதனால், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு,ஓட்டுரிமை வழங்கபட வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய, தேர்தல் கமிஷனுக்கும்,மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.
பிரதிநிதித்துவ சட்டம்விசாரணையின் போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:வெளிநாடு வாழ் இந்தி யர்களுக்கு, ஓட்டுரிமை வழங்குவதில், தேர்தல் கமிஷன் ஆர்வமாக உள்ளது. இதற்கு, முதலில், மக்கள் பிரதிநிதித்துவசட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய தேர்தல்களில் ஓட்டளிக்க இரண்டு முறைகளை செயல்படுத்தலாம்.
இந்தியாவில் வசிக்கும் ஒருவரை, தங்களின் பிரதிநிதியாக நியமித்து, ஓட்டளிக்க வைக்கலாம். இல்லாவிடில், மின்னணு தபால் ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டளிக்கலாம்.வெளிநாடுகளில் உள்ள துாதரகங்கள் மூலமோ, இணையதளம் வழியாகவோ, ஓட்டளிக்கும் முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், மின்னணு தபால் ஓட்டுச்சீட்டு முறையில், முறைகேடுகள் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை.
சோதனை அடிப்படையில், முதலில், ஒரு மாநில சட்டசபை தேர்தலில், ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில், இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம்.அதன்பின், அதிக சட்ட சபை தொகுதிகளில் செயல்படுத்தலாம். பின், லோக்சபா தேர்தலிலும் செயல்படுத்தலாம்.இவ்வாறு தேர்தல் கமிஷனின் வழக்கறிஞர் கூறினார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் கூறியதாவது:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்பதில்,அரசு ஆர்வமாக உள்ளது. இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடரில், மசோதா தாக்கல் செய்யப் பட்டு, நிறைவேற்றப்படும்.
நடவடிக்கை
வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள இரண்டு யோசனைகளும்
சிறப்பானவை. இதை அரசும் ஏற்றுக் கொள்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அரசு ஆதரவு தரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மின்னணு ஓட்டுச்சீட்டு
மின்னணு ஓட்டுச்சீட்டு குறித்து, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாவது:பார்லிமென்ட் மற்றும் எந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதோ, அந்த மாநில சட்டசபை தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கலாம்.ஓட்டளிக்க விரும்புபவர்கள், சபையின் காலம் முடிவதற்கு ஆறு மாதத்துக்கு முன், மின்னணு மூல மாகவோ, தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு, மனு அனுப்ப வேண்டும். இந்த மனுவை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்வார்.
மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விபரங்கள் திருப்தியளித்தால், சம்பந்தப்பட்ட தொகுதியின், தபால் ஓட்டுச்சீட்டை, மின்னணு வழியாக, மனுதாரருக்கு, தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார்.இந்த ஓட்டுச்சீட்டை, பதிவிறக்கம் செய்ய, மனுதாரருக்கு, 'பாஸ்வேர்ட்' ஒன்று வழங்கப்படும். அதை பயன்படுத்தி, ஓட்டுச்சீட்டை பதிவிறக்கம் செய்து ஓட்டளிக்கலாம். பின், அதை, தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம். இதில், வேறு யாரும் ஓட்டளிக்க முடியாது. முறைகேடு நடக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment