Wednesday, November 22, 2017

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் ஓய்வூதியப் பலன்கள்: நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்

By DIN  |   Published on : 22nd November 2017 02:15 AM 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு முதல்கட்டமாக, ஓய்வூதிய பணப்பலனாக ரூ.267.45 கோடி ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

இதேபோன்று, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.194.68 கோடியை ஒரு வாரத்துக்குள் வழங்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தகவலையும் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

பொதுநல வழக்கு: இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை என்பவர் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தை, பொதுநல வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் ரூ. 1,136 கோடி கடந்த மாதம் (அக்.7) 7 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு முதல்கட்டமாக ஓய்வூதிய பணப்பலனாக ரூ.267.54 கோடியும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.194.68 கோடியும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என்றார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'இந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த தொகையை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. 

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் மோட்டார் வாகன இழப்பீட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த உத்தரவை அனைத்து மோட்டார் வாகன வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்கள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்க உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் தமிழக அரசு இதுதொடர்பாக பட்டியலை சமர்ப்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...