Saturday, November 11, 2017

தூக்குத் தண்டனை முறைக்கு மாற்று என்ன? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்


By  புது தில்லி,  |   Published on : 11th November 2017 01:46 AM 
supreme-court

மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிட்டுக் கொல்லும் வலி நிறைந்த முறைக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
 ரிஷி மல்ஹோத்ரா என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க மேலும் 6 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவில் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் உயிரைக் கூட துன்புறுத்தாமல் பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 அதாவது வலியும், வேதனையும் நிறைந்த தண்டனைகளை வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
 ஆனால், தற்போது உள்ள நடைமுறையில் கழுத்தில் தூக்கு மாட்டி தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு எதிரானது.
 மேலும், இந்த முறைக்கு எதிராக மத்திய சட்ட ஆணையமே, தனது அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளது.
 பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனை முறையை ஒழித்துவிட்டு, மின் அதிர்வு கொடுப்பது, மயக்க ஊசி போடுவது போன்ற முறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றி வருவதையும், மத்திய சட்ட ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 இதைத் தவிர பல்வேறு வழக்குகளின் மீதான தீர்ப்புகளின்போதும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை விமர்சித்துள்ளன. அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தற்போதைய மரண தண்டனை வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதற்கு முன்பு, இந்த மனுவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

news today 15.01.2025