Saturday, November 4, 2017

Posted Date : 20:48 (03/11/2017)
vikatan

‘சிங்காரச் சென்னை’யின் அவல மனசாட்சி இந்தக் 'கல்லுக்குட்டை'

சி.மீனாட்சி சுந்தரம்



'சென்னையைச் சுழற்றிப்போட ஒருநாள் மழைபோதும்!' என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 2015-ல் ஏற்பட்ட டிசம்பர் பெருவெள்ளத்துக்குப் பிறகு நீண்டு முழங்கும் ஒவ்வொரு கனமழையும் சென்னைவாசிகளுக்கு மரண பயத்தைக் காட்டி வருகிறது. சினிமா பாஷையில் சொல்வதென்றால், ‘ஏ’ சென்டர் முதல் ‘சி’ சென்டர்வரை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்த மழை. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பமுடியாமல், ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் கூடியிருந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். முக்கியச் சாலைகளில் எல்லாம் தண்ணீர் தேங்கியிருக்க, ஆட்களை அள்ளித் திணித்தபடி மினி படகாக மாறியிருந்த பல ஷேர் ஆட்டோக்கள் தத்தளித்தபடியே பயணித்தன. இந்தக் காட்சிகளைக்கூட நீங்கள் டி.வி சேனல்களில் பார்த்திருக்கக்கூடும். ஆனால், தலைநகரில் எப்போது மழைத்தூறல் விழுந்தாலும் தங்களின் உடுப்புகளையும், உடைமைகளையும் உடனடியாக பரண்களில் ஏற்றிவிடும் 'நீர்வாசி மக்களின் துயரங்கள்' பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.

இடைத்தேர்தல் களேபரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியின் உண்மை முகத்தை இப்போது சென்று பாருங்கள்... துருத்திக்கொண்டு வெளியே தெரியும். அதேபோல், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொரட்டூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், தேனாம்பேட்டை கால்வாய் பகுதி, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை கால்வாய் பகுதி, ஈக்காட்டுத்தாங்கல், கத்திப்பாரா, கே.கே.நகர் அடையாற்றின் ஓரங்கள், கோட்டூர்புரம், மந்தைவெளி, வாராவதி பகுதி, பெருங்குடி, கல்லுக்குட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல் ஏரிப் பகுதிகள், குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி சாலை என மொத்தச் சென்னையின் நாற்கரங்களும் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. இவற்றுள் என்றுமே விமோசனம் கிடைக்காமல் தத்தளிக்கும் ‘தீவுப்பகுதி’தான் பெருங்குடி அருகேயுள்ள 'கல்லுக்குட்டை!'



சென்னையின் ‘சிலிக்கான் வேலி’யான ராஜீவ்காந்தி சாலைக்குப் பக்கவாட்டில் செல்கிறது எம்.ஜி.ஆர் சாலை. ஒருகாலத்தில் தரமணி, பழைய மகாபலிபுரம் சாலையின் (இப்போது ராஜீவ் காந்தி சாலை) இணைப்பு வழியாக இருந்த இந்தக் களிமண் சாலைதான் இப்போது எம்.ஜி.ஆர் சாலை. தரமணி மக்களுக்கே இந்த வளர்ச்சி புதிது. ஏனெனில், இப்போது முக்கிய ஐ.டி நிறுவனங்களைத் தாங்கி நிற்கிறது எம்.ஜி.ஆர் சாலை. அதன் பிற்பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட வேளச்சேரி வரை பரந்துவிரிந்த பகுதிதான் இந்தக் கல்லுக்குட்டை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தொடர்ச்சி என இதைக்கூறுவார்கள். ‘கழுவேலி’ என்றும் இதற்குப் பெயர் இருக்கிறது. முன்பு இப்பகுதியில் பெரும் பாறைகள் நிறைந்த குட்டைகள் பரவலாக இருந்ததால், இதற்குக் ‘கல்லுக்குட்டை’ எனப் பெயர் வந்திருக்கிறது.

இங்கு குடியேறிய மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசித்துவந்தவர்கள். தென்தமிழகத்திலிருந்து கூலி வேலைகளுக்காக சென்னை வந்தவர்களைப் பெருவாரியாக இங்கு பார்க்க முடியும். நகர மயமாக்கலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்தப் பகுதியில் வந்து தஞ்சமடைந்திருக்கிறார்கள் இவர்கள். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்துவருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வேயின்படி இங்கு 7,000 ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இது அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு என்றாலும், கல்லுக்குட்டை பகுதியில், சுமார் 15,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள்தொகை 50,000-க்கும் மேல். ஜெ.ஜெ நகர், திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் புரட்சி நகர் என ஏழு நகர்கள் இருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதி என்றாலும், சென்னை மாநகராட்சியின் கீழ்தான் இங்கு பணிகள் நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியின் 14-வது மண்டலத்துக்குள் வரும் வார்டு இது. சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்.



மழை நாள்களில் இந்தப் பகுதிக்குள் சென்று வெளியே வருவது எளிதான காரியம் அல்ல. கனமழைக்குப் பின்னர் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒரு தெர்மாக்கோல் மிதவைகளை இங்கு பார்க்க முடியும். ''இதுதாங்க இங்க போக்குவரத்து. மரண சவாரிதான்... என்ன செய்யுறது?'' எனப் புலம்பித் தீர்க்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன். மேலும் அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, ''எங்களுக்குச் சாலை வசதியெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. மழை பெய்ஞ்சு தண்ணி நிக்கும். வத்திடுச்சுனா வெயில்ல காஞ்சு களிமண் இறுகிடும். அவ்ளோதான் அதுலதான் போய்ட்டு வர்றோம். யாராச்சு சாகக்கிடந்தாங்கனா உள்ளுக்குள்ள ஆம்புலன்ஸ்கூட வராது. எவ்வளவோ போராட்டம் செஞ்சு பாத்துட்டோம். பிரயோஜனமே இல்ல. இங்க இருக்க புள்ளைங்களுக்கு டெங்கு வந்துட்டுப் போச்சு. வெஷப்பூச்சி கடி, பாம்பு கடிச்சுதுன்னாலும் தூக்கிட்டு ஓடுவோம். பெருங்குடி ஏரி இல்லைனா தரமணி இ.பி. கிட்ட வந்து ஆம்புலன்ஸ் நிக்கும். ஒவ்வொரு மழைக்கும் குறைஞ்சது 10,000 குடும்பம் பாதிக்கப்படும். மேட்டுமேல இருக்கவங்க ஓரளவுக்குத் தப்பிச்சுடுவாங்க. வெயில்காலத்துல தேங்குற மொத்தக் குப்பையும் மழை நேரத்துல வீட்டுக்குள்ள மிதக்கும், மனுசக்கழிவுகளும் சேர்ந்துவந்து சாகடிக்கும். அப்பிடியே தம் புடிச்சுகிட்டு சோறு தின்னு பொழச்சுக்குவோம். இதவிட வேற என்னத்த சொல்றது..?'' என ஏக்கமாகக் கடந்துபோகிறார் அவர்.



இப்பகுதியில் இதுவரை அ.தி.மு.க-வே கோலோச்சி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க-வின் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 2016 தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியில் வெற்றிபெற்று தி.மு.க-வின் அரவிந்த் ரமேஷ், 'எம்.எல்.ஏ' ஆகியிருக்கிறார். ''அரசுத்துறையில் யாரும் கவனிப்பதே இல்லை. பட்டா கேட்டு போராடினோம். ‘அரசு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறீர்கள். எங்களால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது’ என அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள்'' என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

‘சிங்காரச் சென்னை’யின் அவல மனசாட்சியே இந்தக் கல்லுக்குட்டை. அதன் நீர்சூழ் அலங்கோலங்கள்தான் தலைநகர ஆட்சிப்பீடங்களைக் குத்திக் குத்திக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது.

பதில்தான் இன்னும் கிடைத்தபாடில்லை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024