இனிய’ பெண்கள் கவனிக்க…
Published : 11 Nov 2017 11:08 IST
டி. செல்வகுமார்
உலக நீரிழிவு நாள்: நவம்பர் 14
வீட்டுக்கு வீடு வாசல் இருக்கிறதோ இல்லையோ, இன்று வீடுதோறும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவராவது இருக்கிறார். வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர்வரை நீரிழிவால் இன்றைக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் நம் நாட்டில் அதிகம்!
மனித உடலில் உள்ள இன்சுலின் என்கிற முக்கியமான ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் வருகிறது. இந்த நோய் வருவதற்கு பரம்பரையும் முக்கியக் காரணம். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்கும் இந்நோய் வருவதற்கு 80 சதவீத சாத்தியம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்ணே ‘கரு’
இந்த நோய்க்கு, 1923-ல் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டுபிடித்த கனடா நாட்டு மருத்துவர் ஃபிரெட்ரிக் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி, ‘உலக நீரிழிவு நோய்’ நாளாக 1991-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் கருப்பொருள் ஒன்றை மையப்படுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘பெண்ணும் நீரிழிவும்’!
“பொதுவாக வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ளதை சாப்பிடுவதை பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீரிழிவு நோய்க்கு விரதமும் கூடாது, விருந்தும் ஆகாது. யார் எந்தப் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் நீரிழிவு நோய் வந்துவிட்டால், உணவில் கட்டுப்பாடு அவசியம்” என்ற அறிவுரையுடன் தொடங்கினார் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் ஏ.பன்னீர்செல்வம். இந்த ஆண்டு கருப்பொருள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்:
குடும்ப ஆதரவே ஆதாரம்
“உடலில் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் போவதால் 20 வயதைக் கடந்த பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது. குடும்பத்தில் அம்மா அல்லது அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ, உடல் பருமனாக இருந்தாலோ நீரிழிவு நோய் பாதிப்பதற்கான சாத்தியம் அதிகம். இதன் பின்விளைவுகள் பல பெண்களுக்குத் தெரிவதில்லை” என்றவர், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பட்டியலிட்டார்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் அரிப்பு, அதிக தாகம் எடுத்தல், நாக்கு வறட்சி, அதிகப் பசி, சோர்வு, எடை குறைதல், தோலில் அரிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும் பெண்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பெண் மட்டுமல்லாமல் அவரைச் சார்ந்திருப்பவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும், என்கிறார்.
“முறையான உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோய் உள்ள பெண்கள் நேரம் தவறாமல் சாப்பிடாவிட்டால் சர்க்கரை அளவு குறைந்து நினைவிழக்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகம் சாப்பிடுபவர்கள், இனிப்பு சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் பல தொந்தரவுகளைக் கொடுக்கும். ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அவர் மட்டுமல்மாமல் அவருடன் இருப்பவர்களுக்கும் பொறுப்பு அதிகம். ஏனென்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் பெண்கள், தங்களைக் கவனித்துக் கொள்வதில்லை. இந்த வழக்கத்தைப் பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும், மாதவிடாய் நின்ற பெண்களிடம் நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பெண்களுக்கு நீரிழிவு நோயுடன் உயர் ரத்த அழுத்தமும் இதய ரத்தக் குழாய் நோயும் இருக்கும். எனவே, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் தனி கவனம் தேவைப்படுகிறது.” என்கிறார் பன்னீர்செல்வம்.
பேறுகாலத்தில் கவனிப்பு
சில பெண்களுக்கு சிறு வயதிலே நீரிழிவு நோய் வந்துவிட்டால், தொடக்கக் காலத்தில் இருந்தே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாகப் பேறுகாலத்துக்கு முன்பு நீரிழிவு நோயை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். குழந்தை பெற்றெடுக்கும்வரை அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், கரு கலைந்து போகலாம். குறைப்பிரசவமாகி குழந்தை ஊனமாகவோ, மந்த புத்தியுடனோ, அதிக எடையுடனோ பிறக்கும் ஆபத்தும் உள்ளது.
இது குறித்து பன்னீர்செல்வம் மேலும் கூறும்போது, “ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து 120 மில்லி கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு 6 அல்லது 7-வது மாதத்தில் பாதிப்பு ஏற்படலாம். புத்தி மந்தமாகவோ அல்லது 3.5 கிலோவுக்கு அதிகமான எடையிலோ குழந்தை வளரும். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இந்த பாதிப்புகள் நிச்சயம் ஏற்படாது.
பிரசவத்துக்குப் பிறகு மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொண்டு, தேவையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு நீரிழிவு நோய் இல்லாமலாகி விடும். இருந்தாலும், முறையான உணவு முறையும் உடற்பயிற்சியும் இல்லாவிட்டால் நீரிழிவு நோய் மீண்டும் வருவதற்கு சாத்தியமுள்ளது” என்றார்.
நீரிழிவின்றி ஆரரோக்கியமாக வாழட்டும் பெண்கள்!
No comments:
Post a Comment