Thursday, January 11, 2018

வரலாறு தந்த வார்த்தை 17: பாஸ்போர்ட்டில் இரண்டு வகை

Published : 09 Jan 2018 11:10 IST


ந. வினோத் குமார்




புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 125 பேர் பின்னால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று சென்னைக் காவல்துறை அறிவித்திருப்பதுதான் கடந்த வாரம் பலரை ‘தள்ளாட’ வைத்த செய்தி.

‘ஏம்பா, குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா ‘ஃபைன்’ போடுங்க. அதை விட்டுட்டு, பாஸ்போர்ட்டுல எல்லாமா கை வைக்கிறது?’ என்று சிலர் கேட்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் மட்டுமே ‘குடி’மகன்கள் வண்டியைப் பிறர் மீது மோதி, அவர்கள் ‘மேலே’ செல்வதற்கு ‘பாஸ்போர்ட்’ கொடுக்காமல் இருப்பார்கள் என்று காவல்துறை நினைத்திருக்கலாம்.

இப்படிக் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் பிறந்திருக்கிறது என்பதை உங்களால் ஜீரணித்துக்கொள்ள முடிகிறதா?

‘One for the road’ - இதுதான் அந்தச் சொற்றொடர். ‘விடை பெறுவதற்கு முன்னால் ஒரு பெக்’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இன்றைக்கு இருப்பதுபோல, 18-ம் நூற்றாண்டில் நெடுஞ்சாலைகள் கிடையாது. அதனால் மோட்டல்களும் இல்லை. என்றாலும், எப்போதும் பயணிகள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்?

அன்றைய இங்கிலாந்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணிகள் புறப்பட்டால், வழியில் தேவைப்படும் உணவு உள்ளிட்ட இதர விஷயங்களை மூட்டை கட்டி எடுத்துக்கொள்வார்களாம். அந்த மூட்டையை ‘ஒன் ஃபார் தி ரோட்’ என்று சொல்வது வழக்கம். இப்படித்தான் அந்தச் சொற்றொடர் புழக்கத்துக்கு வந்தது. பிற்காலத்தில், நண்பர்களுடனான பார்ட்டியை முடித்துக்கொண்டு, அவர்களிடமிருந்து பிரிய மனம் வராமல், ‘கடைசியா ஒரு ரவுண்டு!’ என்று கெஞ்சி, ஒரு வாய் சாப்பிட்டுப் போவதற்கு மேற்கண்ட சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

பார்ட்டியிலிருந்து விடைபெறும்போது இந்தச் சொற்றொடரைச் சிலர் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ஆனால், ‘ஊற்றிக்கொள்வது’ அதிகமாகிவிட்டால், நாம் ஒரேயடியாக ‘மேலே செல்வதற்கான பாஸ்போர்ட்’ உடனடியாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, மறந்துவிட வேண்டாம்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...