Thursday, January 11, 2018

 கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

Published : 10 Jan 2018 20:38 IST

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 12-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 13-ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. 13-ம் தேதி போகியும், 14-ம் தேதி பொங்கலும், 15-ம் தேதி மாட்டுப்பொங்கலும், 16-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 13-ம் தேதி போகிப்பண்டிகை சனிக்கிழமை வருகிறது. அதையடுத்து ஞாயிறு, திங்கள், செவ்வாய் என பண்டிகை வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு ஒரு ஆணையை வெளியிட்டுள்ளது. ஆளுநர் ஆணையின் படி முதன்மைச்செயலர் சுனில் பாலீவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
''தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலம் முழுதும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும் குறிப்பாக கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களில் பயிலும் மாணவச்செல்வங்கள் அவர்களது இளவயது கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்துடன் இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டு.தமிழகத்தில் உள்ள உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைகழகங்களுக்கு கீழ் இயங்கும் உறுப்புக்கல்லூரிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக வருகிற 12.01.18 வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024