Wednesday, January 3, 2018

அரசு மருத்துவமனையில், 'ஆப்பரேஷன்'; அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்

Added : ஜன 03, 2018 01:34 | 



பெரம்பலுார் : அரியலுார் பெண் கலெக்டர், அரசு மருத்துவமனையில், குடல்வால் ஆப்பரேஷன் செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, 38. இவர், 2017, ஜூலை, 12ல் பொறுப்பேற்றது முதலே, மக்கள் நலனில், அக்கறையுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நாட்களாக, இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், கலெக்டருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

தொடர்ந்து, குடும்பத்தாரிடம், அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூற, அவர்களும் அழைத்துச் சென்றனர். கலெக்டரை பரிசோதித்த டாக்டர்கள், குடல் வால் வளர்ந்துள்ளதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அங்கேயே, ஆப்பரேஷன் செய்யுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கலெக்டருக்கு ஆப்பரேஷன் செய்தனர். ஆப்பரேஷனுக்கு பின், அங்கேயே உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, நலமுடன் உள்ளார்.

கலெக்டராக உள்ளவர், தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து, அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்து, சிகிச்சை பெற்று வருவதை அறிந்த பொதுமக்கள், அவரை நேரில் பார்த்து பாராட்டி, நலம் பெற வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024