Wednesday, January 3, 2018

ராமேஸ்வரத்தில் ரூ.500க்கு தரிசனம் - கூடுதல் விலையில் புண்ணிய தீர்த்தம் : நீராடல் முதல் தரிசனம் வரை முறைகேடு

Added : ஜன 03, 2018 04:48

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் அதிகாரிகள் ஆசியுடன் உலா வரும் வெளிநபர்கள் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.500ம், தீர்த்த பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். ஆனால் இங்குள்ள சிலர் அடாவடி வசூலால், பக்தர்கள் மனவேதனையில் செல்கின்றனர். கோயிலுக்கு தினமும் 50 ஆயிரம் வரை பக்தர்கள் வருவதால், நெரிசலை தவிர்க்க சிறப்பு தரிசனம் (ஒரு நபருக்கு ரூபாய் 50) வழியாக செல்ல பக்தர்கள் காத்திருப்பர்.

அதிகாரிகள் கவனிப்பு? : இதனை பயன்படுத்தி கோயிலுக்குள் உலா வரும் வெளிநபர்கள், பக்தர்களிடம் ரூபாய் 300 முதல் 500 வரை வசூலித்து, அதிகாரிகளை கவனித்த(!) பிறகு 'முக்கிய கதவு' வழியாக பக்தர்களை அழைத்து செல்கின்றனர். இதனால் 50 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கடும் மன வேதனையடைகின்றனர்.

வெளிநபர்கள் அடாவடி : இதுதவிர பஞ்சமிர்தம், ருத்ரா அபிேஷக பூஜைக்கு ரூபாய் 1,500க்கு டிக்கெட் இருந்தாலும், டிக்கெட் இன்றி பக்தர்களை சிறப்பு பூஜையில் பங்கேற்க வைத்து, அவர்களிடம் ரூபாய் 3 முதல் 5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். மேலும் கோயிலுக்குள் ஒரு நாளைக்கு 3 முதல் 5 ஆயிரம் வரை விற்கும் கோடி தீர்த்த பாட்டில், ரூபாய் 20 க்கு விற்க வேண்டும். ஆனால் விலை பட்டியல் பலகையை கவிழ்த்து வைத்து கூடுதலாக விற்கின்றனர்.இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரின் ஆசியுள்ளதால் நாளுக்கு நாள் வெளி நபர்களின் அடாவடி அதிகரித்து கொண்டே வருகிறது.

கூடுதல் வசூல் : மேலும் கோயிலுக்குள் புனித நீராட ஒரு நபர் ரூபாய் 25க்கு டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால், தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் கோயில் வாசல் முன் நின்று
பக்தரிடம் ரூபாய் 100 முதல் 300 வரை பேரம் பேசி (கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாளில் இதை விட கூடுதலாக வசூலிப்பது), குறுக்கு வழியில் நீராட அழைத்து சென்று வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் சரவணன் கூறியதாவது: கோயில் அதிகாரி ஒருவரின் ஆசியுடன் கோயிலுக்குள் உலா வரும் வெளிநபர்கள் பக்தரிடம் தரிசனத்திற்கு ரூபாய் 300 முதல் 500 வசூலித்தும், நீராடும் பக்தரிடம் ரூபாய் 25ஐ விட தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் கூடுதலாக 200 வரை வசூலிக்கின்றனர். கோடி தீர்த்தம் ஒருபாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 விற்கின்றனர். முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் வெளிநபர்கள் அடாவடி வசூலை தடுக்க முடியவில்லை. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரி, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம், என்றார்.

கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில், ''கோயிலுக்குள் சுற்றி திரியும் வெளிநபர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலைக்கு தீர்த்த பாட்டில் விற்பதாக பக்தர்கள் ஒருவர் கூட புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024