Saturday, January 13, 2018

சொந்த ஊர் செல்ல அலைமோதிய கூட்டம் : அரசு பஸ்கள் ஓடியதால் மக்கள் உற்சாகம்

Added : ஜன 13, 2018 00:57



சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல், பஸ் போக்குவரத்து இயல்பானது. இதனால், பொங்கல் பண்டிகை கொண்டாட, வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணியர், உற்சாகம் அடைந்துள்ளனர்.


போக்குவரத்து ஊழியர்கள், அரசு நிறைவேற்றிய, ஊதிய ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜன., 4 முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னையில், நீதிமன்றம் தலையிட்டதால், நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
வேலைநிறுத்தத்தால், பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களை, அரசால் இயக்க முடியவில்லை. முன்பதிவு செய்த பயணியருக்கு மட்டும், அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காத மக்கள், அரசு பஸ்களையே நம்பி இருந்தனர். அவர்கள், முன்பதிவு மையங்களை தொடர்பு கொண்டனர்.


ஆனால், ஜன., 10, 11 ஆகிய நாட்களில், முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால், ஊருக்கு செல்ல முடியுமா என்ற, குழப்பத்தில் இருந்தனர். ஏற்கனவே, முன்பதிவு செய்தவர்களில், பாதி பேர் ரத்து செய்தனர்.


நேற்று முன்தினம் இரவு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணியர், நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தனர். நேற்று காலை முதலே, சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில், பயணியரின் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணிக்கு, சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள, முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு பின், சென்னை திரும்புவோருக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டன. பயணியருக்கு உதவும் வகையில், பஸ் நிலையங்களில் பல இடங்களில், போக்குவரத்துத்துறை சார்பில், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


சென்னை கோயம்பேடு, அண்ணா நகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய, ஐந்து இடங்களில் இருந்து, நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால், வழக்கமாக வருவதுபோலவே, பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து, அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...