Saturday, January 20, 2018


சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!


மாட்டுவண்டியில் வந்த மாப்பிள்ளை
இருமனம் இணையும் திருமணங்கள் சமீப நாள்களாகப் பெரும் பொருள்செலவில் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. நாகரிகம் மெதுவாக நடைபயின்றுக்கொண்டிருந்த காலத்தில், காலையில் வயலுக்குப் போய்விட்டு, மாலை வீடு திரும்பிய பிறகு உற்றார், உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த இரவில்தான் திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், நாகரிகம் நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓடத் தொடங்கிய பிறகு, காலை வேளையில் திருமணங்களை நடத்தி வருகிறோம். திருமணங்களில் வகைவகையான சாப்பாடு, மேள தாளம் என எந்தளவுக்கு ஆடம்பரம் அதிகமாக இருக்கிறதோ அதுதான் சிறந்த திருமணம் என்ற சிந்தனை சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால், உண்மையில் திருமணங்களுக்கு ஆடம்பரம் தேவையில்லை. அன்பு நிறைந்த வாழ்த்துகள் மட்டுமே மணமக்களைச் சிறப்பாக வாழவைக்கும். இது தொடர்பாக நாம் பேசினாலும், நம்ம வீட்டு கல்யாணம் என்று வரும்போது, நாமும் தேசிய நீரோடையில் கலந்து விடுகிறோம். ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சங்கர் கணேஷ், தனது திருமணத்தைத் தமிழ் முறைப்படி நடத்தியதும், அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து அசத்தியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரின் மகன் சங்கர் கணேஷ், சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக மாலத்தீவில் ஆசிரியராக வேலைபார்த்த அனுபவமும் உண்டு. இவருக்கு தமிழ் பண்பாடு மீதும் கலாசாரம் மீதும் அதிக பற்று உண்டு. இந்நிலையில் இவரின் உறவுக்கார பெண், கலைச்செல்விக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது. தனது திருமணத்தில் வீண் ஆடம்பரங்களை தவிர்க்க நினைத்த சங்கர் கணேஷ், மணப்பெண்ணிடமும் உறவினர்களிடம் எடுத்துச்சொல்லி சம்மதம் வாங்கிக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை வத்தலக்குண்டு பெருமாள் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது. வரவேற்பு வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலில் திருமணம் முடிந்ததும், தன் துணைவியைத் தூக்கி, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் அமர வைத்தவர், தானும் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார். உடன் மாப்பிள்ளை, பெண் தோழர்களும் அமர்ந்துகொண்டனர். கலர் கலர் காகிதங்கள் சுற்றி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது. மாட்டு வண்டியில் புதுமண ஜோடிகள் வருவதை அறிந்து பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
மாட்டுவண்டியில் வந்த மாப்பிள்ளை
மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த புதுமணத் தம்பதியினர் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வாழ்த்து சொன்ன நண்பர்கள், உறவினர்களுக்கு மணமகன் மரக்கன்றுகளைப் பரிசாக அளித்தார். மேடையில் திருவள்ளுவர், அம்பேத்கர், பாரதியார் படங்கள் இடம் பெற்றிருந்தன. இது வத்தலக்குண்டு பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுவண்டி ஊர்வலம் பற்றி புதுமாப்பிள்ளை சங்கர் கணேஷிடம் கேட்டபோது, ‘‘எனக்கு தமிழ் கலாசாரம் மீது தீராத காதல் உண்டு. திருமணம் என்ற பெயரில் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அடுத்தவருக்கு சொல்வதற்கு முன்பாக எனது திருமணத்தை அப்படி நடத்த வேண்டும் என முடிவு செய்தேன். கிராமத்து முறைப்படி மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்ததால், மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, இனி நடக்கும் திருமணங்கள் நமது தமிழ் முறைப்படி, ஆடம்பரம் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதுதான் இதன் மூலம் நான் சொல்ல வந்த செய்தி’’ என்றார். ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களைவிட, அலங்காரமாக நடந்த இந்தத் திருமணம் அனைவரையும் கவர்ந்தது.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...