Saturday, January 20, 2018

கட்ட வண்டி... கட்ட வண்டி... காப்பாத்தும் நல்ல வண்டி!

''பாரப்பா பழனியப்பா... பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா.... உள்ளம்தான் சிறியதப்பா..."

இப்படி கேலி செய்தவாறு, மாநகரச் சாலைகளில் தடக்... தடக்... சத்தத்துடனும், ஜல்... ஜல்... சலங்கை ஒலியுடனும், ஒருகாலத்தில் கலக்கிக் கொண்டிருந்தது நம் நாட்டின் பாரம்பரியப் போக்குவரத்து வாகனமான மாட்டு வண்டி (கட்டை வண்டி). இன்றோ... நகர சாலைகளில் இதை ஓட்டிச் சென்றால், மக்கள் கேலியாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்துகளை டிரைவர்கள் மெதுவாக ஓட்டினாலே, ‘என்ன கட்டவண்டியா ஓட்டுறே?’ என்று சிடுசிடுக்கும் மக்களுக்கு நடுவில், நிஜ கட்ட வண்டிகள் வந்தால்... அவ்வளவுதான். வண்டியோட்டியை வறுத்தே தின்றுவிடுவார்கள்.



ஆனால், மனிதனின் முதல் வாகனமே... இந்தக் கட்ட வண்டிதான்! கால ஓட்டத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறினாலும் இதன் ஆரம்ப வடிவம் மட்டும் இன்று வரை மாறவில்லை. முதன்முதலில் விவசாயப் பணிகளுக்காகத்தான் இந்த மாட்டு வண்டிகள் புழக்கத்துக்கு வந்தன. ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களும் சரி, நிலம் இல்லாதவர்களும் சரி, மாட்டுவண்டி வைத்திருப்பதை கௌரவமாக நினைத்த காலம் உண்டு.

சொல்லப்போனால், இன்று வீட்டுக்கு வீடு கார் நிற்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் அல்லவா! சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை... மாட்டு வண்டி வைத்திருப்பதுதான் கௌரவமாக இருந்தது. அதிலும் கூண்டு வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளை வைத்திருப்பவர்கள்... இன்றைக்கு கார் வைத்திருப்பதற்கு சமமாக மதிக்கப்பட்டனர்.

குடும்பத்தோடு கோயில்களுக்குச் செல்வதும், விசேஷங்களுக்கு செல்வதும் இதுபோன்ற மாட்டு வண்டியில்தான். கூண்டு வண்டி இல்லாதவர்கள், வண்டியின் மீது பச்சை தென்னை ஓலையை கூண்டு போல கட்டி, அடியில் வைக்கோலை பரப்பி, அதன்மீதும் தென்னை ஓலையைப் பரப்பிவிடுவார்கள். முதலில் பெண்கள், குழந்தைகளை ஏற்றி அமர வைத்துவிட்டு, ஆண்கள் முன்புறமாக நின்றுகொண்டு போவார்கள். இந்தப் பயணத்தின் சுகமே அலாதிதான். இன்று டெல்லிக்கும், சென்னைக்கும் ஃப்ளைட்டில் போய் வந்தாலும் கிடைக்காத சுகம்.



விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அவர்களின் சொந்த வேலைகளுக்குக் கைகொடுப்பதோடு, வருமானத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தன இந்தக் கட்டை வண்டிகள். இன்றைக்கு இருக்கும் அத்தனைச் சாலைகளும், அன்று மாட்டுவண்டிகள் போட்டுக் கொடுத்தவைதான். அந்த மண் சாலையின் மீதுதான் ஜல்லிக் கற்களைக் கொட்டி, தாரை ஊற்றி பளபள சாலையாக மாற்றி, கார்களிலும் பைக்குகளிலும் பறக்கிறோம். ஒவ்வொரு பகுதிக்குமே, அந்தப் பகுதியின் பாரம்பரியத்துக்கேற்ற பிரத்யேக வண்டி, வாகனங்கள உண்டு. தமிழ்நாட்டில் மாடுகள், குதிரைகள் என்றால், ராஜஸ்தான் பகுதியில் ஒட்டகங்கள், பனிப் பிரதேசங்களில் கரடிகள் என்று பழக்கப்படுத்தி வண்டிகளில் பயன்படுத்துவார்கள். தமிழகத்தில் மரத்தால் செய்யப்பட்ட கட்டை வண்டிகளையே பயன்படுத்தி வந்தனர். 70, 80 ஆம் ஆண்டுகளில் டயர்களுடன் இணைக்கப்பட்ட இரும்பு வண்டிகள் புழக்கத்துக்கு வந்தன.

அரசு இந்த வண்டிகளை இலவசமாக கொடுக்கவே கட்டை வண்டிகளின் அடையாளம் மாறத் தொடங்கியது. இருப்பினும் சென்னையின் பாரீஸ் மற்றும் பிற மாவட்டங்களின் காய்கறி சந்தைகளில் இன்றைக்கும் பழமை மாறாத கட்டை வண்டிகள் வலம் வருவது ஆச்சர்யமே! இந்த வண்டிகள், இன்றைக்கும் பல குடும்பங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கின்றன!


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இதைப் பற்றி பெருமையோடு பேசினார்.

"பதினோரு வயசிலிருந்தே வண்டி ஓட்டிட்டு வர்றேன். ஆரம்பத்துல கட்ட வண்டியை ஓட்டிட்டு இருந்தேன். அப்புறம் டயர் வண்டி கைக்கு வந்துச்சு. எருவு ஓட்டுறது, அறுவடை செய்ற நெல் மூட்டைகளை கொண்டு வர்றதுனு பல வேலைகள் கிடைக்கும். வண்டி வேலைகள் கிடைக்காத சமயங்கள்ல ஏர் ஓட்டுறது, மஞ்சு ஓட்டுறதுனு மத்த வேலைகளயும் செய்வேன். இந்த வண்டிக்கு பெட்ரோல், டீசல், கேஸ், இன்ஜின் எல்லாம் இந்த செவுலும், பிள்ளையும்தான் (இவரிடம் இருக்கும் மாடுகளின் செல்லப்பெயர்தான் இவை). நுகத்தடியைக் கழுத்து மேல வெச்சுட்டா... சும்மா, ஜனங்... ஜனங்னு கிளம்பிடும். பம்பரமா வேலை செய்யும்.

தினமும் பச்சைப் புல்லை போட்டுடணும். தவிடு தண்ணிய காட்டிடணும். மத்தபடி எவ்ளோ வேலைனாலும் வாங்கிக்கிலாம். என் மாடுங்க ரெண்டும் தங்கமான மாடுங்க. திருவண்ணாமலை பக்கத்துல இருக்கிற செங்கத்திலிருந்து ஜோடி 87 ஆயிரம் ரூபாய்னு வாங்கிட்டு வந்தேன். ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் வரை சம்பாதிச்சு கொடுக்குதுங்க. ஒரு குடும்பத்துக்கு தேவையான வருமானத்தை இந்த மாடுங்க சம்பாதிச்சு கொடுக்குதுங்க" என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசின ரமேஷ்,"ஊருக்கு ஊரு டிராக்டர் வந்துட்டாலும், இன்னும் சில வேலைகளுக்கு மாட்டுவண்டிங்கதான் கைகொடுக்குதுங்க. முன்ன ஊருக்கு 10, 20 வண்டிகள் நின்னுச்சு. இப்ப ஒண்ணு ரெண்டு வண்டிகள் ஓடிட்டு இருக்கு" என்றபடியே டுர் டுர்... எனச் சொல்லி தன் மாடுகளை விரட்ட, வண்டி வேகமெடுத்தது!

த. ஜெயகுமார்

படங்கள்: ஆர். வருண்பிரசாத்

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...