Monday, January 1, 2018

ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மூன்று சவால்கள்

By  சென்னை,  |   Published on : 01st January 2018 01:20 AM
vairamuthuC
அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி மூன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

 இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


 "ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து, அவரின் நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஊடகங்களில் ரஜினிக்கு வாழ்த்துகளும், வசை மொழிகளும் குவிந்து வருவதைக் கண்டேன். வாழ்த்துவதற்கும், வசைபாடுவதற்கும் போதுமான கால அவகாசத்தை ரஜினிக்குக் கொடுக்கவில்லை என்பது என் எண்ணம். வாழ்த்துகிறவர்களெல்லாம், அவரை நாளை வசைபாடலாம். வசைபாடுகிறவர்கள், நாளை வாழ்த்தலாம். இந்த கருத்துகள் இடமாற்றத்துக்கு கொஞ்சம் கால அவசகாசம் தேவைப்படும்.


 தொலைபேசியில் வாழ்த்து: அரசியல் அறிவிப்பு வெளியான பின்னர் தொலைபேசியில் ரஜினியைத் தொடர்புகொண்டு வாழ்த்துச் சொன்னேன். நாற்பதாண்டு காலம் கலைத் துறையில் நீங்கள் செலுத்திய உழைப்பைப் போல, இரு மடங்கு உழைப்பை இந்த அரசியல் வெளிக்கு தரவேண்டி இருக்கும் என்று சொன்னேன். அதற்காக உங்கள் உடல் நலனும், மன வளமும் செறிந்திருக்க வேண்டும்; செழித்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினேன்.
 கலைஞன்- தலைவன் இடைவெளி... ரஜினி மிகப்பெரிய கலைஞன், இப்போது தலைவனாக அவர், தனது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார். கலைஞன், தலைவன் என இந்த இரண்டுக்குமான இடைவெளி மற்ற மாநிலங்களில் மிக மிக அதிகம். தமிழகத்தில் சிலருக்கு இந்த இடைவெளி மிகக்குறைவு. ரஜினிக்கு, கலைஞன் என்பதற்கும், தலைவன் என்பதற்குமான இடைவெளி குறுகியதா; நீண்டதா என்பதைக் காலம் சொல்லும்.


 அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியின் முன்பாக மூன்று பிரச்னைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன். முதலில் தனது எதிரி அல்லது எந்த கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். நண்பன் யார் என்பதை பின்னர் கூட முடிவு செய்துகொள்ளலாம். ஆனால், எதிரியை முதலாவதாக முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சாதிக்க முடியாததை, நான் எப்படி சாதித்துக் காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்தக் கொள்கை விளக்கத்தைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தீர்மானித்து, தமிழக மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும். சொல்லப்போனால், தலைவன் மற்றும் கலைஞன் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியை இந்த கொள்கைதான் இட்டு நிரப்பும் என்று நான் நம்புகிறேன்.
 மூன்றாவது, கொள்கை என்று ஒன்று அறிவிக்கப்பட்டால், அதைக் கொண்டுசெலுத்துவதற்கு, அதை அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும், சிறந்த செயல் வீரர்களும் ஒரு இயக்கத்துக்கு, ஒரு தலைவருக்குத் தேவை. இந்த மூன்றும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்கள்' என்றார்.

No comments:

Post a Comment

news today 02.01.2025