Sunday, January 14, 2018

வாசிப்போம் சுவாசிப்போம் நேசிப்போம்

By உதயை மு. வீரையன்  |   Published on : 11th January 2018 01:53 AM  | 

அறிவுடையார் எல்லாம் உடையார் என்று திருக்குறள் கூறுகிறது. அறிவில்லாதவர் வேறு எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஏதும் இல்லாதவரே என்றும் விளக்குகிறது. அந்த அறிவு கல்வியறிவு என்றும், பட்டறிவு என்றும் இரு வகைப்படும். கல்வியறிவுக்குப் புத்தகங்களே துணை செய்கின்றன. புத்தகக் கண்காட்சிகளின் வளர்ச்சிக்கு அதுவே காரணம்.


புத்தகங்கள் அறிவை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள்; அறிவுக்கும், அறியாமைக்கும் போர் ஏற்படும் போதெல்லாம் இந்த ஏவுகணைகளே ஏவப்படுகின்றன. இங்கே அழிவு ஏற்படுவதில்லை. அறிவே ஏற்படுகிறது; புதிய உலகம் உருவாகிறது; புதிய மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர்; புதிய பாதைகள் போடப்படுகின்றன.

குடியேற்ற நாடுகளையெல்லாம் இழப்பதற்குக் கவலைப்படாத மாபெரும் இங்கிலாந்து பேரரசு, மாமேதை ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களை இழந்திட சம்மதிக்காத நிலைக்குக் காரணம் என்ன? ஒரு நாட்டின் பெருமையை இழந்திட யாராவது சம்மதிப்பார்களா? சாகாத இலக்கியங்கள் ஒரு நாட்டின் மதிப்புமிகு கருவூலங்கள்; செல்வங்கள் ஒருநாள் அழிந்து போகும்; இவை அழியாதவை.

அந்த ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளே ஏப்ரல், 23 உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு ஐ.நா. அவையின் கல்வி, கலாசார நிறுவனம், உலக மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக இந்த நாளைக் கொண்டாடும்படி அறிவுறுத்தியது.
தோழர்களே, இது ஓர் புத்தகம் மட்டுமே என நினைக்காதீர்! இதைத் தொடுகிறவன் இதை எழுதிய ஆசிரியரையே தொடுகிறான் என்றார் அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன். ஆம், நூல்கள் வெறும் காகிதங்கள் அல்ல, அவை அச்சடிக்கப்பட்ட ஆயுதங்கள்; அதுவும் அறிவாயுதங்கள்.

நூல்கள் என்பவை ஒரு மொழியின் பிள்ளைகள்; ஓர் இனத்தின் வாரிசுகள்; ஒரு நாகரிகத்தின் தொட்டில்கள்; ஒரு தேசத்தின் சொத்துகள்; அறிவுக்கடலில் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துகள்; அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் கடமை.
புத்தகங்கள் இப்போதைய நிலையை அடைவதற்கு அவை கடந்து வந்த பாதைகளும் நெடியவை. அக்கால அரசர்களின் காலத்தில் கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டன; பின்னர் செப்பேடுகளாகவும், ஓலைச்சுவடிகளாகவும் மாற்றம் பெற்றன. அறிவியல் வருகையால் காகிதங்களும், அச்சு எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
1445-ஆம் ஆண்டில் ஜெர்மனியில் புத்தகம் அச்சிடும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை கூடன்பர்க் உலகத்தில் சிறந்த 10 சாதனையாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
புத்தகங்கள் உருவாக புதிய முறையைக் கண்டுபிடித்த ஜெர்மனியில்தான் ஏராளமான புத்தகங்களும் அழிக்கப்பட்ட சோக நிகழ்வுகளும் நடந்தேறின. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது ஜெர்மனி புத்தக எதிர்ப்பிலும், எரிப்பிலும் முனைந்து நின்றது. நாஜிகளின் கொள்கைகளுக்கு எதிரான புத்தகங்கள் பொது இடங்களில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. ஹிட்லர் காலத்தில் இப்படி எரிப்பது தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

புகழோடு வாழ முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல், அவர்களை இகழ்பவர்களை நொந்து கொள்வதால் பயன் என்ன? என்று கேட்டார் திருவள்ளுவர். சர்வாதிகாரியான ஹிட்லர் போன்றவர்கள் மாறாத பழியை அவர்களாகவே வேண்டி விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள்.

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, ஒரு தேசத்துக்குப் பெருமை சேர்ப்பது மன்னர்களும், சாம்ராஜ்யங்களும் அல்ல. மாமுனிவர்களும், சித்தர்களும், மாமேதைகளும், சிந்தனையாளர்களும், அவர்களது கருத்துகளும், கருத்துகளின் வடிவங்களான இறவா இலக்கியங்களுமே! அவையே மொழி, இனம், நாகரிகம் இவற்றின் அடையாளங்களாகும். பண்பட்ட சமுதாயத்தின் முதல் முகவரியாகும்.

உலகில் தலைசிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் கிரேக்க நாகரிகம் சிந்தனையின் பிறப்பிடமாக இருந்தது. கிரீஸ் நாட்டின் முதல் நூலகம் பிஸிஸ்டிராடஸ் என்ற கிரேக்கரிடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் 28 நூலகங்கள் இருந்தனவாம்.

நினிவா என்ற இடத்தில் இருந்த ஆசிய நாட்டு நூலகத்தில் 10 ஆயிரம் களிமண் பட்டயங்களின் வடிவில் நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. உலகம் போற்றும் அரசியல் தத்துவ மேதை பிளேட்டோ ஏராளமான நூல்களைச் சேமித்து வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. மற்றோர் அரசியல் மேதை அரிஸ்டாடில் தாம் உருவாக்கி வைத்திருந்த நூலகத்தை தம் சீடருக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளார்.
இந்தியாவில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாகார்ச்சுனன் என்ற அரசன் உருவாக்கிய நூலகம் நாகார்ச்சுன வித்யா பீடம் என்பதாகும். இப்போதைய ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இருந்திருக்கிறது. கி.பி. 399 முதல் 414 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாஹியான் என்னும் சீனப் பயணி தனது நூலில் நாகார்ச்சுன வித்யா பீடம் பற்றியும், அன்றைய இந்தியாவில் பல புத்த மடாலயங்களில் நூலகங்கள் செயல்பட்டு வந்தது பற்றியும் எழுதியுள்ளார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் 68,700 பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்களும், 36,058 பாபிரஸ் புல் சுருள்களில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தனவாம். அவற்றுள் 3,100 பனை ஓலைகள் மட்டும் நமக்குக் கிடைத்துள்ளன.
சமண சமயம் சார்ந்த அறுபெரும் திருமறைகள் தொக்கப்பட்டு, உரைகளும் எழுதப்பட்டன. இத்தகைய தொகை நூல்களைச் சேர்த்து வைத்த இடங்கள். ஞான பண்டாரங்கள் எனப்பட்டன. நூலக இயக்கத்திற்கு பங்காற்றிய மற்றொரு சமயம் புத்தமதமாகும். பெளத்த மத நூலகத்திற்கு செழுங்கலை நியமம் என்று பெயர். சைவக் கோயில்களின் ஒரு பகுதியில் சரசுவதி பண்டாரம் என்ற பெயரில் நூலகங்கள் இருந்தனவாம். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் வரலாற்றுப் புகழ்பெற்றது.

இக்காலத்தில் இந்தியாவில் நூலகங்கள் இல்லாத இடங்களே இல்லை எனலாம். தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை முதலிய நகரங்களில் புகழ்பெற்ற நூலகங்கள் இயங்குகின்றன.
காலங்களையும், தேசங்களையும் கடந்து உலக மக்களை ஒன்றுபடுத்தவும், சிந்திக்கவும் செய்யும் ஆற்றல் புத்தகங்களுக்கே இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவாடுவதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; ஆயினும் காலத்தின் இந்தத் தடைகளைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது. அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம்... என்று டாக்டர் மு.வ. கூறுவது சிந்திக்கத்தக்கது.

1981-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே பெரியதோர் நூலகங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் நூலகம் இலங்கையில் சிங்களவர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இலட்சக்கணக்கான நூல்களும், ஓலைச்சுவடிகளும் சாம்பலாயின. மிச்சம் மீதி இருந்தவர்களை ஹிட்லரின் வாரிசான இராசபக்ச இனப்படுகொலை செய்தான்.தேனீக்கள் சுறுசுறுப்புடன் நிறைய பூக்களுக்குப் பறந்து சென்று தேனைச் சேகரிப்பது போன்று நீங்களும் நிறைய புத்தகங்களைப் படித்து நிறைய நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார் மார்க்சிம் கார்க்கி. கல்விக்கும் நூல்களுக்கும் செலவழிப்பது செலவினம் ஆகாது. அவை மூலதனம் என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 2000க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகங்கள், 2500க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், மாவட்டம் தோறும் மாவட்ட மைய நூலகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 12,000 கிராமப்புற உள் நூலகங்களும் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் நூலாசிரியர்களும், நூல் வெளியீட்டாளர்களும் மகிழ்ச்சியாக இல்லையே ஏன்? கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் நூலகத்துறை நூல்களை வாங்காமல் புறக்கணித்து வருகிறது. இதனை அரசு புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுசார் மக்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஒரு மிகப்பெரிய நூலகத்துறை தனித்துறையாக மாற்றப்படாமல் கல்வித்துறையின் ஓர் அங்கமாகவே இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பது? பொது நூலக இயக்குநர் என்னும் தலைமைப் பொறுப்புக்கு நிரந்தர இயக்குநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. கிளை நூலகங்களுக்குக் கேட்க வேண்டுமா? தமிழகம் முழுவதும் நூலகர் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வளமான நிலமே செழிப்பாகப் பயிர்கள் வளர உதவும். நலமான நூலகத் துறையே எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் வளரத் துணை செய்யும். நாம் உயிர்வாழ சுவாசிப்பது போலவே வாசிப்பதும். வாசிப்பவர்களே உலகை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர். எனவே வாசிப்போம் வாருங்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024