Sunday, January 14, 2018

கல்லூரிக்கான இணைப்பு ரத்து பல்கலை உத்தரவுக்கு தடை
Added : ஜன 14, 2018


சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், தனியார் கல்லுாரிக்கான இணைப்பை ரத்து செய்து, பாரதியார் பல்கலை பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், பிஷப் தார்ப் கல்லுாரி உள்ளது. இதன் செயலர், டாக்டர் பால் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:


குறைந்த கட்டணம்


எங்கள் கல்லுாரிக்கு, அரசின் நிதி உதவி கிடையாது; சுயநிதி கல்லுாரி. பட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்பில், 469 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 35 ஆசிரியர்களும், 17 அலுவலர்களும் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை, நிர்வாகம் வழங்குகிறது.கல்லுாரிக்கு, பாரதியார் பல்கலை வழங்கிய இணைப்பு, ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த கல்வியாண்டு முதல், மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இணைப்பு குறித்து, மூன்று பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. 


அதன்பின், எங்களுக்கு, 'நோட்டீஸ்' எதுவும் தரப்படவில்லை. விளக்கம் அளிக்க, சந்தர்ப்பமும் தரவில்லை. இணைப்பு ரத்துக்கான காரணமும் கூறப்படவில்லை.எனவே, பாரதியார் பல்கலை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


நோட்டீஸ்


மனு, நீதிபதி, மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், வழக்கறிஞர், காட்சன் ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி, மகாதேவன், ''எந்த விசாரணையும் இல்லாமல், நேரடியாக இணைப்பை ரத்து செய்யும் விதத்தில், பாரதியார் பல்கலை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு, மூன்று வாரங்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டுள்ளார்.மனுவுக்குப் பதிலளிக்க, சிறப்பு பிளீடர் முனுசாமிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024