Friday, January 26, 2018

எங்கே செல்கிறது இந்தியக் கல்வி முறை?

By பா. ராஜா | Published on : 26th January 2018 01:32 AM

அண்மையில் ஒரு திரைப்படம் வெளியானது. அதில் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவது போன்று ஒரு காட்சி. நேர்முகத் தேர்வில் ஒரு சுருக்க வார்த்தைக்கு, விரிவாக்கம் என்ன என்று கதாநாயகன் கேட்கிறார்.
பங்கேற்றவர்களில் பலரும் தவறான விடையையே கூறுகின்றனர். இந்தக் காட்சியை நாம் சாதாரணமானதாக எடுத்துக் கொண்டாலும், இன்றைய உண்மை நிலையும் அதுதான் என்பது வருத்தத்துக்குரியது.
நடுத்தர வகுப்பினராக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, தம் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அடிப்படைக் கல்வி வலுவானதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அடிப்படைக் கல்வி வலுவானதாக இருந்தால், பின்னாளில் தமது குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு அதீத நம்பிக்கை. இதனால்தான் தங்களது சக்திக்கும் மீறி, அதிகப் பணம் செலவிட்டு, சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேடி ஓடுகின்றனர்.

இந்தியாவில் கல்வியானது, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் அதிக அளவில் இருப்பது அரசுப் பள்ளிகளே. இதற்கான நிதி மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளூர் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒதுக்கப்படுகிறது. பொருள்கள், சேவைகளைப் பெறும்போது கல்விக்கென தனி வரியையும் செலுத்தி வருகிறோம்.
நகர்ப்புறங்களில் இரண்டரை வயதுக் குழந்தைகளுக்கென குழந்தைகள் காப்பகங்கள், நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் வலியுறுத்தப்படுகிறது. நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 7:5 என்ற விகிதத்தில் உள்ளன. கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், உயர்கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளில் சுமார் 29% பேர் தனியார் கல்வி நிலையங்கள் மூலம் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் வசிப்போரில் 6 முதல் 14 வயது வரையுள்ளோரில் 96.5% குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் அல்லது பள்ளிகளில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இதே நிலை, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடையே அதிகரித்து வருவது மற்றொரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அனைவரும் உயர்கல்வி வரை செல்ல வேண்டும் என்பது அரசுகளின், கல்வியாளர்களின் விருப்பமாகும்.

ஆனால், ஆரம்பக் கல்வி முதலே நாம் அனைத்தையும் கற்றுத் தெளிக்கிறோமா? அதற்கு தேவையான உபகரணங்கள் கல்வி நிலையங்களில் உள்ளனவா? போதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அனைவரும் கல்வி கற்க வேண்டும். சரி. ஆனால், முறையாகக் கற்றோமா, கற்பிக்கப்படுகிறோமா என்ற கேள்வியை கல்வியாளர்கள் நம்முன் எழுப்புகின்றனர். நமது ஆரம்பக் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதை சில புள்ளிவிவரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.

கிராமங்களே இந்தியாவின் உயர்நாடி என்கிறோம். ஆனால், அத்தகைய கிராமப்புறங்களில் வசிக்கும் 14-18 வரையுள்ளவர்களுக்கு தமது தாய்மொழியில் உள்ள பாடங்களை சரளமாகப் படிக்க முடியவில்லை. 36% மாணவர்களுக்கு நாட்டின் தலைநகரம் எது என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. 24 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 3,000 மாணவ, மாணவிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு, கிராமப்புற மாணவர்களின் உண்மை நிலையை பட்டவர்த்தனப்படுத்தியுள்ளது.

மேலும், ஆய்வில் பங்கேற்ற 57% கிராமப்புற மாணவர்கள் சாதாரண வகுத்தல் கணக்கைப் போடவே திணறினராம். அதுபோல, இந்தியாவின் வரைபடம் குறித்து 14% மாணவர்களுக்கு தெரியவில்லை. 21% மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் பெயர்கூடத் தெரியவில்லை. மேலும், கற்றல் திறனில் ஆகட்டும், இடைநிற்றலில் ஆகட்டும், மாணவர்களும் மாணவிகளும் சம நிலையிலேயே உள்ளனர் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் கால்வாசிப் பேருக்கு பணத்தை எண்ணத் தெரியவில்லை. 44% மாணவர்களுக்கு எடை அளவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. 40% பேருக்கு நேரத்தை சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இவையெல்லாம் ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை அறிவு. இவை குறித்தே போதிய தெளிவு இல்லையென்றால், பின்னாளில் இவர்களால் எதைச் சாதிக்க முடியும்?

இதுபோன்ற மதிப்பீடு எனப்படும் ஆய்வு கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது என்றும், முடிவில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய நிலையில், அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எப்போது எட்டுவது? நடப்பு ஆண்டில் மத்திய அரசு பள்ளிக் கல்விக்கென ரூ.46,356 கோடியை ஒதுக்கியுள்ளது. விரைவில் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 15% தொகையை ஒதுக்க மத்திய நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார். கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து என்ன பயன்? பலன் மெச்சத்தக்க வகையில் இல்லையே. ஓட்டை எங்கே உள்ளது? ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

அடிப்படைக் கல்வியின் நிலை இப்படியென்றால், உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வியின் தரமும் பெரிய அளவில் முன்னேறவில்லை. மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய ஆய்வுக்கூட வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் சுகாதார வசதி, சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை இல்லை. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் இந்த நிலை மேலும் தொடரக் கூடாது.

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளையும், அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் அடிப்படைக் கல்வி, பள்ளிக் கல்வி வலுவானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. இணையாக பாடத் திட்டத்தை மாற்றினால் மட்டும் பயன் கிடைக்கப் போவதில்லை. அத்தகைய நிலைக்கு நமது கிராமப்புற மாணவர்களை உயர்த்த வேண்டியது ஆட்சியாளர்களின், கல்வியாளர்களின் கடமை.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...