Friday, January 26, 2018

திரைப்படம் என்ன செய்யும்?

By உதயை மு. வீரையன் | Published on : 26th January 2018 01:32 AM

அண்மைக் காலமாக கருத்துரிமைக்கு எதிரான வன்முறை இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், சிந்தனையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் காண முடிகிறது. மாநில அரசுகளும், காவல் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமையவில்லை.

இந்நிலையில் ஒரு திரைப்படம் தொடர்பாக வடமாநிலங்களில் எழுந்த எதிர்ப்பு, வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது. படம் வெளியிடப்படும் திரையரங்குகள் மீது தாக்குதல், கார்களுக்குத் தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது.

தியேட்டர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய 4 மாநிலங்களில் படத்தைத் திரையிட மாட்டோம் என்று மல்டி பிளெக்ஸ் தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான 'பத்மாவத்' திரைப்படத்தில் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாக விவாதம் எழுந்தது. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும், 'பத்மாவதி' என்ற படத்தின் பெயரை 'பத்மாவத்' என்று மாற்றம் செய்தும், திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது.

ஆனால் கர்னி சேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் எதிர்ப்பால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் இப்படத்துக்குத் தடை விதித்தன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.

இதில் இப்படம் ஜனவரி 25 வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடின. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். மாநிலங்களில் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை' என்று மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.

எனினும் இதனை ஏற்க மறுத்த கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் இப்படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனையடுத்து ஹரியாணா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மறுபடியும் போராட்டம் தொடங்கியது.
ராஜஸ்தானில் இந்தத் திரைப்பட எதிர்ப்பின் ஒரு பகுதியாக 1900 பெண்கள் தீக்குளிக்கத் தயாராக இருப்பதாக கர்னி சேனை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு வலுத்து வரும் போராட்டம் காரணமாக பல இடங்களில் இப்படத்தைத் திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ராஜஸ்தானின் சித்தூர் கோட்டையை ஆண்ட ராணியாகக் கருதப்படும் பத்மாவதியின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், அவரது புகழுக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கற்பனைகள் பத்மாவதி கதாபாத்திரத்தை வைத்து புனையப்பட்டு வந்திருக்கின்றன. 20-ஆம் நூற்றாண்டிலும் புதிய கற்பனைகளோடு அந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் சூஃபி கவிதைகளில் 'பத்மாவதி' என்ற பாத்திரம் புகழ் பெற்றது. அது கற்பனையானது என்றும், அதில் வரும் பெண் பாத்திரம் நல்லியல்புகளின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒருசாரார் கூறுகின்றனர்.

ஆனால் இதனை சில அமைப்புகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது முற்றிலும் உண்மைக் கதை என்றும், திரைப்படத்தில் இந்த உண்மை திரிக்கப்பட்டுள்ளதாகவும், தன் கெளரவத்தைக் காத்துக் கொள்ளத் தீக்குளித்த ராணி பத்மாவதியை இழிவுபடுத்துவதாகவும் ராஜ்புத் கர்னி சேனை, அகில பாரத சத்ரிய மகாசபா போன்ற அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக அதில் நடித்த நடிகைக்கும், இயக்குநருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒரு சிறந்த நடிகையின் பணி என்பது கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதுதான் என்பதும், கொடுத்த கதையை வெற்றிகரமாகக் கொண்டு வருவதே சிறந்த இயக்குநரின் பணி என்பதும் இவர்களுக்கு யார் பாடம் நடத்துவது?

முஸ்லிம் மன்னரிடம் சரணடையாமல் தம் உயிரைத் தீயில் மாய்த்துக் கொண்டு கண்ணியத்தைக் காத்தவர் ராணி பத்மாவதி என்றும், அவரது பெருமைக்கு இழுக்கு தேடும் வகையில் தீபிகா படுகோன் நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இராஜபுத்திர மன்னனைத் திருமணம் செய்து கொண்ட சித்தூர் ராணி பத்மாவதி, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வசப்படுவது போல இந்தப் படத்தில் நடித்திருப்பதாகக் குற்றம் கூறப்படுகிறது. இதில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோனின் கொடும்பாவிகள் வடமாநிலங்களில் எரிக்கப்பட்டன.

சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன் அறுத்தது போல தீபிகாவின் மூக்கையும் அறுப்போம் என்று எச்சரிக்கை செய்கின்றனர். தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகாசபா அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத் தொகை 5 கோடியாகவும், 10 கோடியாக உயர்த்திக் கொண்டே போகின்றனர்.

ஜனநாயகத்தில் வன்முறைக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இடமில்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இதை ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டாமா?

பல்வேறு மதங்கள், சாதிகள், வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்துவரும் பெருமைமிகு நாடாக விளங்கிவரும் இந்தியாவில், அண்மைக் காலமாகச் சில சர்ச்சைகள் கலை உலகையும், படைப்புகளையும் சுற்றி நிகழ்ந்து வருகின்றன.
இந்தச் சமூகத்தில் அனைவருக்கும் போராடுவதற்கும், எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது ஜனநாயக வழியில்தான் இருக்க வேண்டும். மாறாக, வன்முறையை வெளிப்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கும், உயிருக்கு வெகுமதி விதிக்கும் நடவடிக்கைகளுக்கும் இங்கு இடமில்லை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' இந்திப் படத்தின் வெளியீடு திசம்பர் முதல் நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் திரையரங்குக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்குக்குத் தீ வைக்கப்பட்டது. தலைநகர் தில்லி உள்பட நாடெங்கும் கலவரம் பரவாக்கப்பட்டது.

இதனால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது. அதற்குரிய தணிக்கைச் சான்றிதழை அளிக்காமல் இருப்பதற்குரிய தடைகளை ஆட்சியாளர்களே ஏற்படுத்தி வந்தனர்.

பாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் பன்சாலி இயக்கத்தில் சுமார் ரூ.190 கோடி செலவில் பத்மாவத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தைத் தயாரித்த வயாகோம்-18 நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அந்தப் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'படத்தில் உள்ள காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே, சிலவற்றை நீக்க வேண்டும் என்று படம் வெளியாகும் முன்பே கோருவது ஏற்புடையது அல்ல' என்று கூறி தள்ளுபடி செய்தது.

'பொது ஒழுங்கு குலைந்துவிடும் என்று மிரட்டுகிறார்கள் என்பதற்காகக் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கக் கூடாது' என்று முன்பே உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. என்றாலும் பல காலமாகக் கருத்துச் சுதந்திரம் குற்றுயிரும், குலையுயிருமாக நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறது.

'பத்மாவத்' திரைப்படத்தை மட்டுமல்ல, மற்ற எந்த கருத்தோவியத்தையும் விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் கருத்துரைக்கும் உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே! அவர்களுக்கும், இந்தத் திரைப்படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்குப் பல படங்களும், பல பாடங்களும் இருக்கின்றன. எப்படிப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒன்றே போதும்.

எதற்கும் கவலைப்படாமல் போராடுவது எனத் தீர்மானித்துவிட்டால் திரைப்படம் என்ன செய்யும்?

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...