Wednesday, January 10, 2018

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை: தகவல்கள் கசியாமல் இருக்க நடவடிக்கை

Published : 10 Jan 2018 18:34 IST

 

ஆதார் விவரங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண் விழித்திரை, கைரேகைகள், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும் இந்த விவரங்கள் வெளியாவதாக கூறி சர்ச்சை எழுந்து வருகிறது. 500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக கூறி அதுபற்றிய தகவல்களை, பத்திரிக்கையாளர் ஒருவர் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டார்

இதனால், ஆதார் தொடர்பான பதிவு செய்த தங்கள் விவரங்கள் பாதுக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனிநபர் ரகசியங்கள் காக்கப்படும் நோக்கத்துடன், குறைவான தகவல்களை மட்டுமே கொண்ட, தற்காலிக மெய்நிகர் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த மெய்நிகர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்படின், இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்க இந்த அடையாள அட்டை தற்காலிகமானதாக இருக்கும். தேவை ஏற்படின், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இதுபோன்ற தற்காலிக அடையாள அட்டையை பெற முடியும்.

இதுமட்டுமின்றி பல்வேறு ஏஜென்சிகளுக்கும், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து தகவல்களையும் தருவதற்கு பதிலாக குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் அளிக்கவும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024