Saturday, January 20, 2018

படிப்போம் பகிர்வோம்: கொஞ்சம் கல்வி கொஞ்சம் இலக்கியம்!

Published : 19 Jan 2018 10:55 IST

ச.ச. சிவசங்கர்



செலினா

‘இன்றைய இளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கமே இல்லை; சமூக ஊடகம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில்தான் மூழ்கிக்கிடக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், சென்னைப் புத்தகக் காட்சியில் சுற்றி வந்தால், அப்படிக் கூறுவது தவறு எனச் சொல்லவைக்கிறது. தாங்கள் படிக்கும் துறை சார்ந்து புத்தகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள், வரலாற்று நூல்கள் என அரங்குகள் ஏறி இறங்கி இளைஞர்கள் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

சிவில் தேர்வு எழுதுவோருக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம்தான். தாங்கள் எழுதும் தேர்வுக்கு ஏற்ற புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால், சும்மா விடுவார்களா? ஒரே குடைக்குள் ஓராயிரம் புத்தகங்களா என வியந்தபடி பலரும் சிவில் தேர்வுப் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். சிவில் தேர்வு புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்த ஓர் அரங்கில் ஏராளமான புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்தார் யாஷர் முகமத் ஷா என்ற இளைஞர்.


யாஷர் முகமத் ஷா எல்லாம் படிப்பு

வாங்கிய நூல்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, “எனது சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகத் தயாராகிவருகிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்குள் நுழைந்த பிறகுதான் புத்தகக் கண்காட்சிக்கே வரத் தொடங்கினேன். போன வருடம்தான் முதன்முறையாக வந்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வு தொடர்பான புத்தகங்களையும் பாடங்களுடன் தொடர்புடைய புத்தகங்களையும் தான் பொதுவாக வாங்குவேன். விரும்பிய, தேடிய புத்தகங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதை நினைத்தால் அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது” என்று பூரித்துப்போனார் அவர்.

கவிதை... கவிதை...

இன்று பல ஊர்களிலும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஆனால், சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி தனித்தன்மை வாய்ந்தது. சென்னைப் புத்தகக் காட்சிக்காக வெளியூர்களிலிருந்து வருவோரும் உண்டு.

அப்படி ஊட்டியிலிருந்து வந்திருந்த செலீனா கூறும்போது, “செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கிறேன். மூன்றாவது ஆண்டாக சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நூல்கள் வாசிப்பில் ஆர்வம் அதிகம். சமீப காலமாக அரசியல், கவிதை நூல்கள் வாசிப்பதிலும் ஆர்வம் கூடியிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நரன் எழுதிய ‘கேசம்’ என்ற நூலை வாங்கினேன்” என்கிறார் செலீனா.

பட்டிமன்றத்துக்குத் தயாராக..

புத்தகக் காட்சிக்கு முதன்முறையாக வந்திருந்த, சென்னை லயோலா கல்லூரி மாணவர் அருண் என்பவரைப் புத்தகக் காட்சியில் சந்திக்க நேர்ந்தது. இதுவரை வராமல் இந்த ஆண்டு மட்டும் புத்தகக் காட்சிக்கு வந்த ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டோம்.


“ நான் இப்போது பட்டிமன்றங்களில் சென்று பேசி வருகிறேன். தெரிந்த விஷயங்களை சில பட்டிமன்றங்களில் பேசி கைத்தட்டல் வாங்கிவிடலாம். தொடர்ந்து அதையே பேசினால் அரைத்த மாவாகிவிடும். புதிய விஷயங்களைப் பகிர வேண்டும் என்றால், நூல்கள் அதிகம் படித்தால்தான் முடியும்.

அந்த வகையில்தான் முதன்முறையாக இங்கே வந்தேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய ‘பெரியார்’ நூலை வாங்கினேன். இனி தொடர்ந்து புத்தகக் காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் உத்தேசித்துள்ளேன்’ என்கிறார் அருண்.

சும்மா ரவுண்டு

இப்படிப் புத்தகம் வாங்கும் நோக்கத்துடன் வரும் இளையோர் மத்தியில், நண்பர்களுடன் பொழுதுபோக்குவதற்காகப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்தவர்களையும் பார்க்க முடிந்தது. அப்படி ஃபிரெண்ட்ஸ்களுடன் வந்திருந்த சென்னை எம்.ஓ.பி. வைணவா கல்லூரி மாணவி ரம்யா என்ன சொல்கிறார்? “இதற்கு முன்பு இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.


ரம்யா

அந்தப் புத்தகங்களையே இன்னும் படித்து முடிக்கவில்லை. இருந்தாலும் புத்தகக் காட்சிக்கு வந்து செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே வந்தால் நன்றாகப் பொழுதுபோகும். மற்றப்படி பிரம்மாண்டமான அரங்கம், ஏராளமான நூல்கள் என ஒவ்வொன்றையும் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது” என்கிறார் ரம்யா.

ஒட்டுமொத்தமாக இளைஞர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கிறது சென்னைப் புத்தகக் காட்சி.

படங்கள்: நீல்கமல்

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...