Friday, October 19, 2018

ஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு

பதிவு: அக்டோபர் 19, 2018 09:42


கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களும் இன்று சன்னிதானத்தை நெருங்கிய நிலையில், போராட்டம் வலுத்ததையடுத்து அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது. #Sabarimala #KeralaGovt



பத்தனம்திட்டா:

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

தீர்ப்பை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்தனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். பெண்களின் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்புகின்றனர். செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரும், எதிர்ப்பு காரணமாக தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்றனர். பம்பையில் இருந்து நடந்து சென்ற அவர்களை சுற்றி பாதுகாப்பு கவசங்களுடன் சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்குச் சென்றனர்.

போலீஸ் புடைசூழ சென்ற பெண்கள் இருவரும் இன்று 9 மணியளவில் சன்னிதானத்தை நெருங்கியபோது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சரண கோஷம் எழுப்பிய அவர்கள், பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் முழக்கங்களை காதில் வாங்கிக் கொள்ளாத போலீசார், தொடர்ந்து அந்த பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் சென்றனர்.



இதையடுத்து சன்னிதானம் அருகே உள்ள நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்களை உள்ளே செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து போலீஸ் ஐஜி ஸ்ரீஜித், அங்கு வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினார். எனினும் பக்தர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம்? என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்ந்து முன்னேறிச் சென்றால், போராட்டமும் தீவிரமடையும் சூழல் இருந்தது. இதையடுத்து, சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து அவர்களை வந்தவழியாகவே போலீசார் அழைத்துச் சென்றனர். #Sabarimala #SabarimalaProtests #KeralaGovt

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...