Saturday, October 20, 2018

தலையங்கம்
போர்க்களமான சபரிமலை



சாமியே அய்யப்பா! சரணம் அய்யப்பா! என்ற குரல்தான் பக்தர்கள் வாயிலிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் சபரிமலை, கடந்த 3 நாட்களாக போர்க்களமாக காட்சியளிக்கிறது.

அக்டோபர் 20 2018, 03:30

சபரிமலையில் குடியிருக்கும் அய்யப்பன் ஒரு கடும் பிரம்மச்சாரி. அவருடைய சன்னிதானத்துக்கு 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே காலம்காலமாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா பதவியிலிருந்து ஓய்வுபெறும் நிலையில், அவர் தலைமையிலான பெஞ்சு, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது, சபரிமலை அய்யப்பன் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு தமிழ், மலையாள மாதமும் முதல் 5 நாட்கள் கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைதிறக்கப்படும். அந்தவகையில், கடந்த 17-ந்தேதி நடைதிறக்கப்பட்டது. முதல்நாளில் ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண் தன் இரு குழந்தை களுடன் சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்திற்கு செல்ல முயன்றார். ஆனால் பம்பா நதியிலிருந்து ஒரு சில மீட்டர் தூரம் சென்றவுடன் பக்தர்கள் எதிர்ப்பால் அவரால் அதற்குமேல் செல்லமுடியவில்லை. இதுபோல, சில பெண் பத்திரிகையாளர்களும் சன்னிதானத்துக்கு போக முயன்று பக்தர்களின் எதிர்ப்பால் செல்லமுடியவில்லை. நேற்று கவிதா என்ற ஆந்திர பெண் செய்தி வாசிப்பாளரும், மாற்று மதங்களை சேர்ந்த ரஹனா பாத்திமா என்ற பெண்ணியவாதியும், மேரி ஸ்வீட்டியும் சன்னிதானத்துக்குள் போக முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களும் போகமுடியாமல் பலத்த எதிர்ப்புக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் திரும்ப அனுப்பப்பட்டனர். ‘சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடி சாவியை ஒப்படைத்து விடுகிறோம்’ என்று தலைமை தந்திரி எச்சரிக்கை விடுத்தார். ஆக, பக்தி மணம் கமழவேண்டிய சபரிமலையில் இப்போது பெண்கள் எங்கே நுழைந்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் பக்தர்கள் பார்வை அதை தடுப்பதில்தான் இருக்கிறது. வழிபாட்டு தலங்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு கோவிலுக்கும் இடையே சில வழிபாட்டு முறைகள், சில மத நம்பிக்கைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலையை எடுத்துக் கொண்டால், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி இல்லை. மற்ற அய்யப்பன் கோவில்களில் பெண்களுக்கு அனுமதி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப்பிறகு, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயற்சிக்கும் பெண்கள் விரதம் இருந்து செல்லும் பெண் பக்தர்கள் அல்ல, பெண் பத்திரிகை யாளர்களும், பெண்ணியவாதிகள் மட்டுமே உள்ளே செல்ல நினைக்கிறார்கள். சபரிமலைக்குள் செல்ல வேண்டும் என்றால் சில விரதங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். கேரள தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், ‘உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. ஆனால் பெண்ணிய வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. பெண்ணிய வாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல’ என்று உறுதியாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் இதுதொடர்பான சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரித்து உணர்வுப்பூர்வமான இந்த பிரச்சினைக்கு அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து உடனடியாக தீர்ப்பு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...