தேர்வுக்குத் தயாரா? - பிளஸ் 2 தமிழில் இருந்து தொடங்குவோம்!
Published : 02 Oct 2018 12:48 IST
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்குப் பல புதிய மாற்றங்களுடன் நடப்புக் கல்வியாண்டு செல்கிறது. இதனால் ஆண்டுதோறும் அரசு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் 'தேர்வுக்குத் தயாரா’ பகுதி, இந்தாண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்குகிறது. இதில் தேர்வுக்குத் தயார்படுத்தும் கடைசி நேர அவசியக் குறிப்புகள் மட்டுமின்றி புதிய மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறியலாம்.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் விடைத்தாள் திருத்தலை விரைந்து முடிக்கவும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழித் தாள்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. தலா இரண்டு என்றிருந்ததைத் தலா ஒன்று என்பதாகக் குறைத்திருக்கிறார்கள். பிளஸ் 2 மதிப்பெண்களும் பிளஸ் 1 போலவே தாளுக்கு 200 என்பது 100 ஆக மாறுகிறது.
மதிப்பெண்கள் சுருங்கினாலும், புதிய பாணியிலான வினாத்தாளை எதிர்கொள்ள மாணவர்கள் முன்பைவிட முனைப்பாகப் படிக்க வேண்டியுள்ளது. உயர்கல்விக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பாக, பிரதானப் பாடங்களின் தாள்களைப் பயிற்சி வினாக்களுக்கு அப்பால் பாடம் முழுமைக்கும் படிக்க வேண்டும். அதற்கொப்ப, மொழி பாடங்களிலும் 'புளூ பிரிண்ட்’ என்ற வரம்புக்குள் அகப்படாது வினாத்தாள்கள் அமைக்கப்படுகின்றன. எனவே ஏனைய பாடங்களுக்கான முக்கியத்துவத்தை மொழிப் பாடங்களுக்கும் இப்போதிருந்தே மாணவர்கள் வழங்குவது, தேர்வு நேர நெருக்கடிகளைக் குறைக்கும்.
பிளஸ் 2 தமிழ் தாள்
100 மதிப்பெண்களுக்கான தமிழ் தாளில், 10 மதிப்பெண்கள் அகமதிப் பீட்டுக்கானது. வருகைப் பதிவேடு, உள்நிலைத் தேர்வுகள், ஒப்படைவு, செயல்திட்டம், கல்வி இணைச் செயல்பாடுகள் போன்றவை இந்த அகமதிப்பீடு மதிப்பெண்களைத் தீர்மானிக்கின்றன. ஏனைய 90 மதிப்பெண்களைப் பொதுத் தேர்வு தீர்மானிக்கும்.
இந்த 90 மதிப்பெண்களும் செய்யுள், உரைநடை பகுதிகளை உள்ளடக்கிய 'பகுதி அ’ (50 மதிப்பெண்கள்), இலக்கணம், துணைப் பாடம், மொழிப் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பகுதி ஆ’ (40 மதிப்பெண்கள்) எனவும் இரண்டாகப் பிரித்து வினாத்தாளில் கேட்கப்படுகின்றன. (அரசு பொதுத் தேர்வுக்கான புதிய வினாத்தாள் மாதிரிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் http://www.tnscert.org/webapp2/xiimodelquestionspaper.aspx இணையப் பக்கத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
'பகுதி அ’ (செய்யுள் மற்றும் உரைநடை) 50 மதிப்பெண்கள்
‘பலவுள் தெரிக’: முந்தைய வினாத்தாள்களில் இடம்பெற்ற ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ பகுதி, சிறு மாற்றங்களை உள்ளடக்கி 'பலவுள் தெரிக’ என்பதாக இடம்பெறுகிறது. தலா 1 மதிப்பெண் என இப்பகுதி 6 மதிப்பெண்களுக்கானது.
குறுவினா பகுதி: தலா 2 என 10 மதிப்பெண்களுக்கான குறுவினா பகுதியானது செய்யுள், உரைநடை என இரண்டாகப் பிரித்து இடம்பெறுகிறது. செய்யுள் பகுதியின் கொடுக்கப்பட்ட 4-ல் 3 வினாக்களுக்கும், உரைநடை யின் கொடுக்கப்பட்ட 3-ல் 2 வினாக் களுக்கும் பதிலளிக்க வேண்டும்.
சிறுவினா பகுதி: செய்யுள் மற்றும் உரைநடை பகுதிகளில் இருந்து கொடுக்கப்பட்ட தலா 3 வினாக்களில் தலா 2-க்கு விடையளிப்பதாக அமைந்திருக்கிறது. இவ்வாறு, வினாவிற்கு 4 மதிப்பெண் எனச் சிறுவினா பகுதி 16 மதிப்பெண்களுக்கு அமைந்தி ருக்கிறது. செய்யுள் சிறுவினா பகுதியில் 15 அல்லது 16வது வினா வாகத் திணை அல்லது துறை குறித்த கேள்வி நிச்சயமாக இடம்பெறும்.
நெடுவினா பகுதி: இதில் ‘அல்லது’ பாணியிலான இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில், தலா 6 என 12 மதிப்பெண்களுக்கானது.
'அடிபிறழாமல் எழுதுக’: பகுதி ’அ’வின் நிறைவாக மனப்பாடப் பகுதி வருகிறது. ஒரு குறள் (2 மதிப்பெண்), ஒரு செய்யுள் (4 மதிப்பெண்) என மனப்பாடப் பகுதி 6 மதிப்பெண்ணுக்கானது. மனப்பாடப் பகுதியில் 20 திருக்குறள்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை ’முடியும் சொல்’ கொடுத்தே கேட்கிறார்கள். ஆனால் முடியும் சொல்லாக ஒரே சொல் பல குறள்களில் இடம்பெறுகிறது.
உதாரணத்துக்கு ’அறிவு’ என்று 5 குறளிலும் 'பெரிது’ மற்றும் ‘நட்பு’ என தலா 2 குறள்களிலும் வருகின்றன. அவ்வாறான குறள்களில் தனக்கு நன்கு தெரிந்த, பிழைக்கு வாய்ப்பில்லாத ஏதேனும் ஒரு குறளை எழுதி முழு மதிப்பெண்ணைப் பெறலாம். அதே போல மனப்பாடப் பகுதியின் இன்னொரு வினாவிற்கு, பாடப்பகுதியின் 9 மனப்பாடச் செய்யுள் களையும் படிப்பதன் மூலம் உரிய 4 மதிப்பெண்களைப் பெறலாம்.
பகுதி ஆ (இலக்கணம், துணைப்பாடம், மொழிப்பயிற்சி) 40 மதிப்பெண்கள்.
'பலவுள் தெரிக’: 'பகுதி அ’ போன்றே இதில் 'பலவுள் தெரிக’ பகுதி 8 மதிப்பெண்களுக்கு இடம்பெறுகிறது. இப்பகுதியின் 8 வினாக்களில் இலக்கணக் குறிப்பிலிருந்து 1 அல்லது 2 வினாக்கள் இடம்பெறும். மேலும் கதைகளின் ஆசிரியர் பெயர், கதையின் மையக்கரு, புணர்ச்சி விதி பயின்று வரும் சொல், பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் சொல், பொருந்தா இணை, பொருள் வேறுபாடு அறிதல் ஆகியவை இப்பகுதிக்குக் கேட்கப்படுகின்றன.
குறுவினா பகுதி: 9 வினாக்கள் கொடுக்கப்பட்டு அவற்றிலிருந்து 7-க்கு விடையளிப்பதாக உள்ளது. அந்த வகையில் தலா 2 என மொத்தம் 14 மதிப்பெண்களுக்கானது. இலக்கணம், மொழிப்பயிற்சியிலிருந்து மட்டுமே இப்பகுதிக்கான வினாக்கள் இடம்பெறும். ‘பகுதி ஆ’வில் 'சிறுவினா பகுதி’ இல்லை.
நெடுவினா பகுதி: மொழித் திறன் பயிற்சிக்கான வினாக்கள் இதில் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்ட 4-ல் 3 வினாக்களுக்கு விடையளிக்கலாம். தலா 4 மதிப்பெண் என மொத்தம் 12 மதிப்பெண்களுக்கானது. இலக்கிய நயம் பாராட்டல், பத்தியில் இருந்து விடையளித்தல், அணி, பழமொழியை விளக்கி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுதல், கவிதை எழுதுதல், தமிழாக்கம் தருதல் உள்ளிட்டவை தனி வினாவாகவோ, ஏதேனும் இரண்டு அடங்கிய ‘அல்லது’ வினாக்களாகவோ இப்பகுதியில் இடம்பெறும்.
துணைப் பாடப் பகுதி: ‘பகுதி ஆ’வின் நிறைவாக ‘அல்லது‘ வினாவாக 6 மதிப்பெண்களுக்கான ஒரு வினா துணைப் பாடப் பகுதியிலிருந்து இடம்பெறும். 10 துணைப் பாடங்களில் இருந்து ‘அல்லது’ வினாவாக இந்த ஒரு கேள்வி இடம்பெறும். முதல் அல்லது கடைசி 5 துணைப் பாடங்களை மட்டுமே குறிவைத்துப் படித்தால்கூட இந்தப் பகுதிக்கு நிச்சயம் விடையளித்துவிடலாம். ‘அல்லது’ வினாக்களில் ஒரு கேள்வியாக ‘சிறுகதையின் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக’ இடம்பெறும். மறுகேள்வியாக ‘நிகழ்ச்சியை நாடகமாக வரைதல்’, ‘கதைமாந்தர் திறனாய்வு’ போன்றவை கேட்கப்படுகின்றன.
பொதுவான கவனக் குறிப்புகள்
அன்றன்றே படிப்பதும், அவ்வப்போது படித்ததை எழுதிப் பார்ப்பதும் தமிழ் தாளில் உயர் மதிப்பெண்கள் பெற உதவும். வினாக்களை வேறு எப்படியெல்லாம் மாற்றிக் கேட்க வாய்ப்புண்டு என்பதை ஆசிரியர் உதவியுடன் அறிந்துகொள்வதும் அவசியம்.
நடந்து முடிந்த காலாண்டுத் தமிழ் தேர்வின் மூலம், புத்தகத்தின் பயிற்சி வினாக்களுக்கு அப்பால் 90-க்கு குறைந்தது 4 மதிப்பெண்ணாவது உள்ளிருந்து கேட்டிருப்பதை அறியலாம். ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு, முன்கதை சுருக்கம், செய்யுள் பாடல் வரிகள், செய்யுள் மற்றும் உரை நடையின் ஆசிரியர் பெயர் ஆகியவற்றையும் படித்துக்கொள்வது சிறப்பு.
மொழிப்பயிற்சி பகுதி வினாக்களின் 14 மதிப்பெண்களுக்கு இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி, சொல் விரிவாக்கம், மரபு சொல், கொச்சை சொல், பிறமொழி சொல், வலிமிகும், மிகா இடங்கள், சொல் விரிவாக்கம், பொருள் வேறுபாடு அறிதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
மாணவர்கள் மத்தியில் வழக்கமாக மதிப்பெண் குறையும் பகுதி என்பதால், இதில் கூடுதல் கவனம் அவசியமாகிறது. 'பிறமொழி சொல்’ குறித்த வினாக்கள் பாடத்துக்கு அப்பால் புழக்கத்தில் உள்ளவை குறித்தும் பொதுவாகவும் கேட்கப்படலாம் என்பதால், அவற்றையும் விசாரித்துப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வதும் குழுவாகத் தாம் அறிந்தவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்வதும் நல்லது.
தேர்ச்சி எளிது
முந்தைய வினாத்தாள் மாதிரியிலான தேர்வுகளைப் போல, இதைப் படித்தால் மட்டும் போதும் என்று இந்தப் புதிய வினாத்தாளில் சொல்ல வாய்ப்புகள் குறைவு. பாடப்பகுதியின் திணை அல்லது துறை பகுதிகளைத் தனியாகப் படித்தாலே 4 மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.
அதுபோன்றே பாடப்பகுதியின் 4 அணிகளில் ஒரு அணி நிச்சயம் என்பதால், அதற்கான 4 மதிப்பெண் உறுதி. இந்த வரிசையில் இலக்கிய (ஏற்புடைய) நயங்கள் பகுதிக்கு 4 மதிப்பெண், மனப்பாடப் பகுதிக்கு 6 மதிப்பெண் ஆகியவற்றைச் சுலபமாகப் பெறலாம்.
மேலே குறிப்பிட்டவாறு துணைப் பாடப் பகுதியின் 5 மட்டுமே படித்து உரிய 6 மதிப்பெண்ணைப் பெறலாம். மற்றபடி பயிற்சி வினாக்களை இப்போதிருந்தே முறையாகப் படித்து வந்தால் 50-க்கு குறையாது மதிப்பெண்களை அள்ளலாம்.
கவனக் குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன்,
முதுகலை தமிழாசிரியர்,
அரியலூர் அரசு மாதிரிப் பள்ளி.
No comments:
Post a Comment