தேடிச் சென்று பார்வை தந்த வெங்கடசாமி!
Published : 01 Oct 2018 08:59 IST
முனைவர் வ. ரகுபதி
புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் கோ.வெங்கடசாமியின் வாழ்க்கை, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் மக்களுக்காகப் பணியாற்ற விரும்புவோருக்குச் சரியான எடுத்துக்காட்டு. முடக்குவாதத்தாலும் சோரியாஸிஸ் நோயாலும் இள வயதிலேயே பாதிக்கப்பட்ட வெங்கடசாமி, மனவுறுதியோடு அவற்றை வென்றவர். மருத்துவப் பட்டம் பெற்று, ராணுவ மருத்துவராகப் பணிபுரிந்த அவர், உடல் பாதிப்புகளுக்கு மத்தியிலும் கண் மருத்துவ மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் சிகிச்சை பெற வேண்டும், அதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டு செயலாற்றியவர்.
1918 அக்டோபர் 1-ல், விருதுநகர் அருகே வடமலாபுரம் எனும் குக்கிராமத்தில் பாரம்பரியமிக்க வேளாண் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் வெங்கடசாமி. ராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு கண் மருத்துவப் படிப்பை முடித்ததும், சென்னை அரசு கண் மருத்துவமனையில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில், குறிப்பாக, கிராமப் பகுதியைச் சார்ந்தவர்கள் எங்கு சென்று கண் அறுவை சிகிச்சையைப் பெற வேண்டும் எனத் தெரியாமல் பார்வை இழந்து தவிப்பது மிகச் சாதாரணமாக இருந்தது.
இந்த யதார்த்தமும், மகான் அரவிந்தருடைய சந்திப்பும், இயல்பிலேயே வெங்கடசாமியிடம் இருந்த அருங்குணமும் அவரது சிந்தனையை ஏழைகளை நோக்கி இட்டுச்சென்றன. விளைவாக, 1954-ல் மதுரை பொது மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் மருத்துவ உலகின் புதுமையும் புரட்சிகரமுமான உத்திகளை நடைமுறைப்படுத்தினார்.
மருத்துவமனைக்குக் கண் நோயாளிகள் வர வேண்டுமென்று மருத்துவர்கள் காத்திருப்பது என்றில்லாமல், நோயாளிகளைத் தேடி மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். கிராமியக் கண் மருத்துவ முகாம்களை 1962-ல் தொடங்கியபோது, மருத்துவ உலகம் அதிர்ச்சியுடன் பார்த்தது. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலுள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் நடந்த அவரது முதல் இலவச கிராமிய கண் அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 2,000 கண் நோயாளிகள் பயன்பெற்றனர். 300 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்தன. மிகமிகக் குறைந்த செலவில் கண் அறுவை சிகிச்சைகள் சாத்தியம் என்ற உண்மையை உணர்த்தினார் வெங்கடசாமி.
இலவசக் கண் மருத்துவ முகாம்களும் அறுவை சிகிச்சைகளும் அரவிந்த் கண் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. தரத்திலோ சேவையிலோ சமரசம் கூடாது, அனைவருக்கும் உலகத்தரமான கண் மருத்துவம் தர வேண்டும் என்பதை அரவிந்த் கண் மருத்துவமனையின் கொள்கையாக்கினார்.
கண் மருத்துவத் துறையில் பல்வேறு புதிய வழித்தடங்களை உருவாக்கிய வெங்கடசாமியின் சாதனைகள் இளைய சமுதாயத்துக்குப் பாடமாகட்டும்!
- வ.ரகுபதி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்.
இன்று டாக்டர் கோ.வெங்கடசாமியின்
100-வது பிறந்தநாள்
No comments:
Post a Comment