'டின் பீர்' குடித்த எலிகள்: பீஹாரில் அதிர்ச்சி
Added : அக் 02, 2018 23:14 |
பாட்னா : பறிமுதல் செய்து வைத்து இருந்த, 11 ஆயிரம் பீர் டின்களை, எலிகள் கடித்து, அவற்றில் இருந்த பீரை குடித்து விட்டதாக, நீதிமன்றத்தில் போலீசார் கூறியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலத்தில், மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில் பெட்டிகளை, வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாக்க வேண்டியது போலீசின் பொறுப்பு. அதனால், அவற்றை போலீஸ் ஸ்டேஷன்களில் பாதுகாப்பு அறையில் வைப்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு இடங்களில், பறிமுதல் செய்யப்பட்ட, 11 ஆயிரத்து, 584 பீர் டின்கள் தொடர்பான வழக்கு, கைமுர் மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பீர் டின்கள் நீதிமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டன. அனைத்து டின்களும் துளையிடப்பட்டிருந்தன; அவற்றில் பீர் இல்லை. இதுபற்றி விளக்கம் அளித்த போலீசார், எலிகள், டின்களை ஓட்டை போட்டு, பீரை குடித்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு, நீதிபதி குமாரி அன்னபூர்ணா அதிர்ச்சி அடைந்தார். அனைத்து டின்களுமே துளையிடப்பட்டு இருந்ததால், இதுபற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த, 2017ம் ஆண்டிலும், இதேபோல் ஒரு வழக்கில், மது பாட்டில் மூடியை எலிகள் கடித்து, மதுவை குடித்து விட்டதாக போலீசார் கூறினர். விசாரணையில் போலீஸ்காரர்களே மதுவை குடித்து விட்டு, எலிகள் மீது பழி போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment