Wednesday, October 3, 2018


ஐந்து மாநில தேர்தல் திருவிழா

Added : அக் 02, 2018 23:03


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களுடன், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டசபைக்கும், இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த மாநிலங்களுக்கான தேர்தல் பார்க்கப்படுகிறது. இதற்காக, அரசியல் கட்சிகள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன; அதன் ஒரு தொகுப்பு:

அமித் ஷாவின் வியூகம் : ராஜஸ்தானில் ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே மீது அதிருப்தி இருந்தாலும், கட்சியின் வெற்றிக்காக, கட்சி தலைவர் அமித் ஷா, பல்வேறு வியூகங் களை வகுத்து வருகிறார். இதற்காக, மாநிலத்தை, ஜெய்ப்பூர், ஜோத்பூர், சித்துார்கர்க் என, மூன்று மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும், இரண்டு மூத்த தலைவர்களை பொறுப்பாளர்களாக்கி உள்ளார். ஜாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள இந்த மண்டலங்களுக்கு, அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களை பொறுப்பாளராக்கி உள்ளார். இதைத்தவிர, கட்சி மிகவும் பலவீனமான நிலையில் உள்ள, 40 தொகுதி களை அடையாளம் பார்த்து, அங்கு தீவிர பிரசாரத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

'சபாஷ்' சரியான போட்டி : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில், ஆட்சியைப் பிடிக்க, காங்கிரஸ் மற் றும், பா.ஜ., இடையே கடும் போட்டி நடக்கிறது. மக்களை கவருவதற்காக இரு கட்சிகளும், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.கால்நடை பராமரிப்புக்காக பல்வேறு மாநிலங்களில் தனியாக அமைச்சர்கள் இருப்பர். ஆனால், முதல் முறையாக பசு பாதுகாப்புக்காக மட்டும், தனியாக அமைச்சரை நியமிக்கப் போவதாக, சவுகான் அறிவித்துள்ளார்.'மாநிலத்தில் உள்ள, 23 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளிலும், பசு பாதுகாப்புக்காக கோசாலைகள் அமைக்கப்படும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்த இரு கட்சிகளும் போட்டிப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், வாக்காளர்களுடன், தற்போது பசு மாடுகளும், தேர்தலுக்காக காத்திருக்கின்றன.

பீதியில் கட்சி தலைவர்கள்பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண்சிங் முதல்வராக உள்ள சத்தீஸ்கரில், காங்கிரஸ் மற்றும், பா.ஜ., ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளும், ஒரே மனநிலையில் உள்ளன. தேர்தல் நடப்பதற்கும் என்னென்ன அரசியல் கூத்துகள் நடக்குமோ என, இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் பீதியில் உள்ளனர்.காங்கிரஸ் தலைமை யிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் தனி கூட்டணியை அமைத்துள்ளது.தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருந்தாலும், சத்தீஸ்கரில், மாயாவதி தனி கூட்டணி அமைத்துள்ளது, காங்கிரஸ் தலைவர்களுக்கு குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், இவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என, ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் பீதியில் உள்ளனர்.காசு, பணம், துட்டு!ஓட்டுக்காக பணம் கொடுப்பது எல்லாமல் சகஜமாகிவிட்ட நிலையில், இதற்காக பேரம் பேசுவது என்பது தான், தற்போது அரசியலில் புது, 'டிரெண்டாக' உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இந்த புதிய டிரெண்டை உருவாக்கி, சர்ச்சையில் சிக்கியுள்ளது.எல்லாரெட்டி தொகுதிக்கான, கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரவீந்தர் ரெட்டி, சமீபத்தில், ஒரு மகளிர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். 

'மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டத்தைக் கூட்டுங்கள்; எனக்கு ஓட்டுப் போடுவீர்கள் என, ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள், உங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்' என, அவர் பேரம் பேசிய வீடியோ, தற்போது தெலுங்கானாவில் வேகமாக பரவி வருகிறது.போட்டி திட்டம்!'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கும் இந்த திட்டத்தை, காங்கிரஸ் ஆளும், வடகிழக்கு மாநிலமான மிசோரமும் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ், அய்ஸ்வாலில், நகர்ப்புற சுகாதார மையமும் துவக்கி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா, மற்றொரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ் வராத ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, முதல்வர் சிறப்பு மருத்துவ திட்டத்தை அறிவித்துள்ளார்.இதில், ஒருவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை பலன் கிடைக்கும் வகையில், 15 மருத்துவமனைகளுக்கு, 2.95 கோடி ரூபாயும் ஒதுக்கி வைத்துள்ளார். தேர்தல் வருவதால், இந்த போட்டி திட்டத்தை அவர் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024