சபரிமலையில் நெரிசலை சமாளிக்க கேரள அரசு திட்டம் ; நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு
Added : அக் 02, 2018 18:11 |
திருவனந்தபுரம்: பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.
சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்ததும் நவம்பர் 16 முதல் சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் 42 நாட்கள் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிய துவங்குவர். இதிலும் பெண்களும் வருவார்கள் என்பதால் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த விரத காலங்களில் நாள் ஒன்றுக்கு தற்போது 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை வருகை புரிந்துள்ளனர். வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நெரிசல் ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் அனுமதி
மேலும் பெண்களுக்கென சன்னிதானத்தில் தனி வரிசை அமைப்பது இயலாத காரியமாக கருதப்படுகிறது. தனி வரிசை அமைக்கும் பட்சத்தில் உறவினர்கள் தனித்தனியாக பிரிவதுடன் காணாமல் போகும் சூழலும் ஏற்படும் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.மேலும் நாள் ஒன்றுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கணக்கிட தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதியை வழங்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும். திருப்பதியில் ஆன்லைன் நடைமுறையால் பெரும் சவுகரியங்கள் இருப்பதாகவும், இதனை சபரிமலையில் பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்கான குளியலறை வசதிகள், பஸ்களில் தனி இடம் ஒதுக்கீடு, தனி, தனி டிக்கட் கவுன்டர்கள், பெண் காவலர்கள் மேலும் பெண் கண்டக்டர்கள் நியமிக்கவும் , நிலக்கல் பகுதியில் 10 ஆயிரம் பெண்கள் தங்கும் அளவிற்கு ஓய்வு அறைகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment