Wednesday, October 3, 2018

மாநில செய்திகள்

ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் கசிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி சாவு


சென்னையில் ஏ.சி. எந்திரத்தில் இருந்து கியாஸ் கசிந்ததால் மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பதிவு: அக்டோபர் 03, 2018 04:45 AM

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு மெட்டுகுளம், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் அரும்பாக்கத்தை சேர்ந்த கலையரசியை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கார்த்திகேயன் (7). தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் ஏ.சி. எந்திரத்தை இயக்கி விட்டு 3 பேரும் தூங்கினர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சரவணன் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று விடுமுறை என்பதால் தூங்குகிறார்கள் என அருகில் வசிக்கும் அவர்களின் உறவினர்கள் நினைத்தனர்.

காலை 9 மணிக்கு பிறகும் கதவு திறக்கப்படவில்லை. அதே சமயம் ஜெனரேட்டர் ஓடும் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்து சிறிது கியாஸ் வாடையும் வந்தது. இதனால் கலையரசியை செல்போனில் தொடர்பு கொண்டனர். செல்போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு முன்பக்க அறையில் சரவணன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். படுக்கையில் கலையரசியும், கார்த்திகேயனும் இறந்த நிலையில் கிடந்தனர்.

உடனே அவர்கள் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர், ஏ.சி. எந்திரத்தை நிறுத்தினர். வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து விட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் வீட்டுக்கு வெளியே எடுத்து வந்து உறவினர்கள் தங்களது மடியில் வைத்து கதறி அழுதனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே உதவி கமிஷனர் ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

கோயம்பேடு பகுதியில் நள்ளிரவு 3 முறை மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்தது. மின்சாரம் தடைபட்டாலும் ஏ.சி. எந்திரம் இயங்க வீட்டின் உள்ளேயே ஜெனரேட்டரை இணைப்பு கொடுத்து சரவணன் வைத்துள்ளார். மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்த போது அதிக மின் அழுத்தம் காரணமாக ஏ.சி. எந்திரத்தில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கலையரசி, கார்த்திகேயன் ஆகியோர் படுக்கையிலேயே மூச்சுத்திணறி இறந்தனர்.

படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து வீட்டின் கதவை திறக்க சரவணன் முயற்சி செய்துள்ளார். எனினும் மூச்சுத்திணறல் அதிகம் ஏற்படவே சரவணன் முன் அறையில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஏ.சி. எந்திரத்தை மெக்கானிக் உதவியுடன் கழற்றி சோதனை செய்து வருகிறோம். வீட்டின் வெளியே வைக்க வேண்டிய ஜெனரேட்டரை வீட்டுக்குள் சரவணன் வைத்துள்ளார்.

அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் இறந்து விட்டனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது:- சரவணன் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தால் காலையில் தாமதமாக தான் எழுந்திருப்பார். காலையில் அவரை எழுப்பினால் நிம்மதியாக தூங்க விட மாட்டீர்களா என திட்டுவார். இதன் காரணமாகவே நாங்கள் சிறிது அலட்சியமாக இருந்து விட்டோம். கார்த்திகேயனுக்கு 4-ந்தேதி பிறந்தநாள். இதற்காக அவனுக்கு புத்தாடைகளை வாங்கி வைத்திருந்தனர்.

சரவணன் அவரது மனைவி, மகன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார். உறவினர் வீடு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மனைவி, மகன் இல்லாமல் செல்ல மாட்டார். வாழ்க்கையில் மட்டுமல்ல, சாவிலும் 3 பேரும் பிரியாமல் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டனர். இவ்வாறு உறவினர்கள் கண்ணீருடன் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024