Wednesday, October 3, 2018

தலையங்கம்

தலையெடுக்கிறதா பெண் சிசு கொலை?




‘ஆணுக்குப்பெண் இளைப்பில்லை காண் இங்கு’ என்றவகையில் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் எல்லா துறைகளிலும் அழியாத முத்திரை பதித்துவருகிறார்கள்.

அக்டோபர் 03 2018, 04:00

‘ஆணுக்குப்பெண் இளைப்பில்லை காண் இங்கு’ என்றவகையில் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் எல்லா துறைகளிலும் அழியாத முத்திரை பதித்துவருகிறார்கள். ஆனால் இடையிலேயே சில ஆண்டுகளாக தடுக்கப்பட்டிருந்த பெண் சிசு கொலை மீண்டும் தலையெடுப்பதைக்கண்டு தமிழக மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் ராமுத்தாய் என்ற 5 மாத கர்ப்பிணி கருக்கலைப்பு செய்ய தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ஜோதிலட்சுமி என்ற பெண்ணை நாடி இருக்கிறார். ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் பெற்றெடுத்த ராமுத்தாய் தன்வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தையாக இருக்குமோ? என்று எண்ணி கருக்கலைப்புக்கு முயன்றபோது, மிகப்பரிதாபமாக உயிரிழந்தார். பெண் குழந்தை என்று நினைத்து கருக்கலைப்புக்கு முற்பட்டு உயிரிழந்த ராமுத்தாய் வயிற்றில் ஆண் குழந்தைதான் இருந்திருக்கிறது. கிராமங்களில் இன்னும் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தையாக இருக்கும் என்ற மூடநம்பிக்கை நிலவுவதன் எதிரொலியா, அல்லது ஏதாவது ஸ்கேன் சென்டரில் பரிசோதனை செய்து தவறாக பெண் குழந்தை என்று தெரியப்படுத்திவிட்டார்களா? என்று தெரியவில்லை. இதேபோல ஒரு சம்பவம் 1991–ம்ஆண்டு சேலம் மாவட்டம் தொப்பூர் காமராஜபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது பெண்ணுக்கும் நடந்துள்ளது. அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் வயிற்றில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்று ஒரு ஸ்கேன் சென்டரில் தெரியவந்ததால், அவரது மாமனார்–மாமியார் இந்த கருவை கலைத்துவிடு என்று வற்புறுத்திய நேரத்தில், அதை மறுத்து அந்தபெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியானது.

‘தினத்தந்தி’யை காலையிலேயே படித்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அப்போது சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரியை அழைத்து, ‘வயிற்றில் இருக்கும் கரு, பெண் குழந்தை என்று யாரும் கருக்கலைப்பு செய்யவேண்டாம், அந்த குழந்தையை வளர்க்க முடியாவிட்டால் அல்லது விருப்பப்படாவிட்டால் அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள், அரசே அந்த குழந்தைகளை தன் செல்ல குழந்தைகளாக வளர்க்கும்’ என்று அறிவித்து, அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘‘தொட்டில் குழந்தை’’ திட்டம். கடந்த மார்ச் மாதம் வரை 4,414 பெண் குழந்தைகளும், 1,017 ஆண் குழந்தைகளும் இந்தத்திட்டத்தின் மூலம் சாவின்பிடியில் இருந்து தப்பி உயிர்பெற்று இன்று பல இல்லங்களில் செல்லக்குழந்தைகளாக வாழ்கிறார்கள். இப்போது இந்தத்திட்டத்தில் ஒருதொய்வு விழுந்துவிட்டதோ என்று சந்தேகப்படும்வகையில் இந்தத்திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மங்கிவருகிறது. சமூகநலத்துறை உடனடியாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குழந்தைகள் நலமையங்களிலும் தொட்டில் குழந்தை திட்டம் குறித்த விளம்பரபோர்டுகளை வைக்கவேண்டும். கிராம செவிலியர்கள் மூலமாக அந்தந்த கிராமங்களில் எந்த பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார் என்று பார்த்து, அரசு பெண் குழந்தைகள் நலனுக்காக செய்யும் உதவிகளை எடுத்துக்கூறி, அப்படியும் வேண்டாம் என்றால் தொட்டில் குழந்தை திட்டத்தில் அந்த குழந்தைகளை விட்டுவிட்டு செல்லும்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உடனடியாக அனைத்து நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தத்திட்டம் குறித்து விளம்பரப்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024