Tuesday, October 16, 2018

களைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அல்வாவுக்கு அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Added : அக் 15, 2018 22:26

திருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா, அக்., 11ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. பல்வேறு தீர்த்தக் கட்டங்களிலும், படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். மாலையில் ஆரத்தி விழா நடக்கிறது. குரு கிரக தலம் என்பதால், துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கைலாசநாதர் கோவில் முன், ஆற்றில் ஏராளமான பக்தர்கள் நீராடுகின்றனர்.

அனல் பறக்குது 

அல்வா சுற்றுலா பயணியர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தரிசித்து, கடைகளில் அல்வா வாங்கி செல்வது வழக்கம். தற்போது, புஷ்கர விழாவால், சிறு வணிக நிறுவனங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆட்டோ, கார், சுற்றுலா வேன் இயக்குவோர் பரபரப்பாக உள்ளனர். அல்வா, இனிப்புக்கு பெயர் பெற்ற கடைகளில், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை, 6:00 மணிக்குள் அல்வா தீர்ந்து விடுகிறது.சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், தாமிரபரணியில் அதிக அளவில் நீர் சென்றது. தற்போது, மழையில்லை. பாபநாசம் அணையில் இருந்து வரும் தண்ணீர் மட்டுமே நதியில் செல்கிறது. வினாடிக்கு, 652 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.பாபநாசம், தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை படித்துறைகளில் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீர் வரத்து குறைந்துள்ளதால் அந்த இடங்களில் நீரோட்டம் இல்லை. தேங்கிய நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் கடந்து நீரோட்டம் குறைந்து விட்டதால், முக்காணி, ஆழ்வார்திருநகரி, ஏரல் போன்ற இடங்களிலும், நீரின் அளவு குறைந்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில், 107 அடி தண்ணீர் உள்ளது. எனவே, நீராடலுக்காக அதிக நீர் திறக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் கோரிக்கை : பக்தர்கள் நீராடும் இடங்களில், பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறையினர், ரப்பர் படகுகளில் ரோந்து செல்கின்றனர். துாத்துக்குடி மாவட்டம், பழையகாயல் மீனவர்கள், 50 பேர், முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஆத்துார் பகுதி நதியில் ரோந்து செல்கின்றனர். இவர்களுக்கு தினமும், 4,000 ரூபாயை மீன்வளத் துறை கொடுக்கிறது. ஆனால், கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.தி.மு.க.,வினர் அன்னதானம்'புஷ்கர விழாவை அரசு சார்பில் நடத்தக்கூடாது' என, கலெக்டர் ஷில்பாவிடம், இந்திய கம்யூ., - தி.மு.க., - ம.தி.மு.க., - வி.சி., கட்சியினர் மனு அளித்தனர்.




மகாபுஷ்கர விழாவிற்கு வருவோர் திருநெல்வேலி அல்வா வாங்க கடைகள் முன் காத்திருக்கின்றனர்.

தி.மு.க. அன்னதானம் : நேற்று குறுக்குத்துறை சாலையில், தி.மு.க., மாவட்ட செயலர் அப்துல் வகாப் தலைமையில் அக்கட்சியினர் அன்னதானம் வழங்கினர்.அப்துல் வகாப் கூறுகையில், ''புஷ்கர விழாவை, தி.மு.க., எதிர்க்கவில்லை. விழாவை, பா.ஜ.,வினர் நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். நதியை சுத்தப்படுத்த வேண்டும், விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். தி.மு.க., நிர்வாகிகளே புஷ்கரத்தில் நீராடி சென்றுள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024