மதம் மாறிய நபருக்கு சான்றிதழ் மறுத்தது சரியே
Added : அக் 17, 2018 22:19
சென்னை, :-ஈரோடு மாவட்டம், நிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், தமிழரசு; கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த இவருக்கு, விக்டர் ஜோசப் என, பெயர் வைத்தனர். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என, சான்றிதழ் பெற்றார். முதுநிலை மற்றும் பி.எட்., பட்டம் பெற்ற பின், ௨௦௧௫ல், புத்த மதத்துக்கு மாறினார். விக்டர் ஜோசப் என்ற பெயரை, தமிழரசு என, மாற்றிக் கொண்டார்.புத்த ஆதிதிராவிட சான்றிதழ் வழங்க கோரிய, தமிழரசு விண்ணப்பத்தை, பெருந்துறை தாசில்தார், ஈரோடு வருவாய் கோட்ட அதிகாரி நிராகரித்தனர். 'ஆதிதிராவிடருக்கான சலுகைகள் பெற, புத்த மதத்துக்கு மாறியுள்ளார்; மனைவி மற்றும் குழந்தைகள், புத்த மதத்துக்கு மாறவில்லை' என, ஆர்.டி.ஓ., உத்தரவில், காரணங்கள் கூறப்பட்டன. பின், ஈரோடு கலெக்டரிடம் தாக்கல் செய்த மேல்முறையீடும், தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழரசு மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதிகள், ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் தாத்தா, ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்; மனுதாரரின் பெற்றோர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி உள்ளனர். மனுதாரரும், கிறிஸ்தவ மதத்தில் இருந்து, மூன்றாவது மதமாக, புத்த மதத்துக்கு மாறி உள்ளார்; அவரது முன்னோர் பின்பற்றிய, ஹிந்து மதத்துக்கு மாறவில்லை. அதனால், தமிழக அரசின் உத்தரவு, இவருக்கு பொருந்தாது.புத்த மதத்தில், ஜாதிய கோட்பாடு கிடையாது. அதனால் தான், அதற்கு தனிச் சிறப்பு உள்ளது. அப்படி இருக்கும்போது, புத்த ஆதிதிராவிடர் என குறிப்பிட்டு, ஜாதி சான்றிதழ் வழங்கும் கேள்வியே எழாது. மேலும், மத்திய அரசின் அறிவிப்பாணையில், ஜாதிகள் பட்டியலில், புத்த ஆதிதிராவிடர் என, எந்த ஜாதியும் இல்லை.எனவே, மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவில், எந்த தவறும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment