Saturday, October 20, 2018


மன்னராட்சியில் அரண்மனை மக்களாட்சியில் நீதிமன்றம்

Added : அக் 18, 2018 21:58


ஸ்ரீவில்லிபுத்துார், மன்னராட்சியில் அரண்மனையாகவும், மக்களாட்சியில் நீதிமன்றமாகவும் உள்ள மன்னர் திருமலைநாயக்கர் கட்டிய அரண்மணை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துாரில்இன்றும் வியக்கவைக்கிறது.

1584ல் பிறந்த திருமலை நாயக்கர் 1623 முதல் 1659 வரை 36 ஆண்டுகள் மதுரையில் ஆட்சி செய்தார். இவருடைய ஆட்சிகாலத்தில் மதுரையில் அரண்மனை, புதுமண்டபம், ராயகோபுரம், நவராத்திரி கொலுமண்டபம், முக்குறுணி பிள்ளையார்கோயில், மாரியம்மன் தெப்பக்குளம் என கலைநயமிக்க, கம்பீரமிக்க கட்டடங்களை கட்டி உள்ளார்.இதில் ஒன்றுதான் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள அரண்மனை.மன்னர் திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசிக்க வரும்போதெல்லாம் தங்குவதற்காக மதுரை அரண்மனையை போல் ஸ்ரீவில்லிபுத்துார்தெற்குரத வீதியில் கலைநயமிக்க அரண்மனையை கட்டி உள்ளார். எட்டு வளைவுகள் கொண்ட தங்குமிடம், 10 துாண்களுடன் கூடிய ஒரு முற்றம் காண்போரை வியக்க வைக்கிறது.ராணி விக்டோரியா காலத்திய முத்திரையில் திருமலைநாயக்கர் ஹால், ஸ்ரீவில்லிபுத்துார் என ஆங்கிலத்தில் எழுதப் பட்ட அரண்மனையின் மேற்கூரை பார்ப்போரை இன்றும் பிரமிக்க வைக்கிறது. முதலாம் உலகப்போரில் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 52பேர் பங்கேற்றதற்கான ஒரு கல்வெட்டும் இங்குள்ளது.இந்த அரண்மனையை இந்திய தொல்லியல் துறை 1921லேயே பாதுகாக்கப்பட்ட நினைவுசின்னமாக அறிவித்திருந்தது. இருந்த போதிலும் 19ம் நுாற்றாண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அரண்மனை நீதிமன்றமாக இயங்கியது. நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டபின் இந்த அரண்மனை மக்கள் பார்வை கூடமாக உள்ளது. அனைத்து நாட்களும் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5 :00 மணிவரை கட்டணமின்றி பார்வையிடலாம். ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாளை தரிசிக்க வரும் நீங்கள், இனி திருமலைநாயக்கர் அரண்மனையையும் பார்த்து ரசிக்கலாம் வாங்க.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024