Friday, October 19, 2018

தாமிரபரணி மகாபுஷ்கரம்... எங்கு நீராடலாம்

Added : அக் 18, 2018 21:53 |

திருநெல்வேலி, தாமிரபரணி மகா புஷ்கர விழாவு அக்.,23ல் நிறைவு பெறுகிறது. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் 'தாமிரபரணியில் எங்கு நீராடலாம்' என்ற சந்தேகம் பக்தர்களிடையே உள்ளது. அதை தீர்ப்பதற்காக தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகள் பற்றி விபரம் இதோ...

தைப்பூச மண்டபம்

திருநெல்வேலிக்கு ரயில், பஸ்களின் வரும் பக்தர்களுக்கு ஜங்ஷன் பகுதியில் உள்ள படித்துறைகளில் நீராடுவது எளிதாக இருக்கும். ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் துாரத்திலேயே கைலாசபுரம் தைப்பூச மண்டபம் உள்ளது. அங்கு பெண்கள், சிறுவர்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறையில் தடுப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை 6:00 மணிவரை அங்கு நீராடலாம். மாலை 6:00 மணிக்கு பின் அங்கு ஆரத்தி வழிபாடுகள் நடக்கும்.





மணிமூர்த்தீஸ்வரம்

நெல்லை ஜங்ஷன் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் துவங்கும் இடத்தில் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. அங்கும், அதன் அருகிலும் விசாலமான படித்துறைகள் உள்ளன. விநாயகர் கோயிலிலும் மாலையில் ஆரத்தி நடக்கிறது. வண்ணார்பேட்டையில் உள்ள இன்னொரு படித்துறை குட்டத்துறை. பேராச்சியம்மன் கோயில் அருகே உள்ள படித்துறையில் நெல்லை மக்கள் வழக்கமாக நீராடுவர். இதுவும் பாதுகாப்பானது. வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை வழியாக அங்கு செல்லலாம்.

ஜடாயு தீர்த்தம்

குறுக்குத்துறைக்கு அருகே மேலநத்தத்தில் அக்னீஸ்வரர் ஆலயம் முன்பாகவும் புஷ்கரத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லைக்கு அருகில் உள்ள இன்னொரு முக்கியமான இடம் ஜடாயு தீர்த்தம். ஜங்ஷன் மணிமூர்த்தீஸ்வரம் வழியாக எட்டெழுத்து பெருமாள் கோயில் அமைந்துள்ள பகுதியில் உள்ளது. தற்போது ஜீயர்கள் ஏற்பாட்டில் புதிய படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் ஆரத்தி நடப்பதால், காலையும் மாலையும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது விசாலமான படித்துறை. மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலையில் வந்தால் தாழையூத்து சங்கர்நகர் கடந்ததும் நாராணம்மாள்புரம் அருகே உள்ள சாலையில் செல்லலாம்.

பாணதீர்த்தம்

தாமிரபரணி துவங்கும் பொதிகை வனப்பகுதியில் இருந்தே தீர்த்தக்கட்டங்கள் துவங்கிவிடுகின்றன. பாபநாசம் அணைக்கு மேல் விழும் முதல் அருவி பாணதீர்த்தம். ஆனால் அங்கு சில ஆண்டுகளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாபநாசம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் முன்பாக தாமிரபரணி ஆர்ப்பரித்து தெளிந்த நீரோடையாக செல்கிறது. அங்கு சிவன், சாஸ்தா கோயில்கள் உள்ளன. ஆனால் தற்போது கார், வேன்கள் அனுமதியில்லை. ஆட்டோக்கள் செல்கின்றன. அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பாபநாசம்

மலையில் இருந்து இறங்கி தரையில் தாமிரபரணி ஓடத்துவங்கும் பாபநாசத்தில் உலகம்மன் கோயில் முன் உள்ள படித்துறை பிரசித்தி பெற்றது. அதன் அருகில் தான் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நீராடி, புஷ்கர விழாவை துவக்கிவைத்தார். பாபநாசத்திற்கு வரும் வாகனங்களை 5 கி.மீ.,க்கு முன்னதாக விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டி அரசு மருத்துவமனை அருகிலேயே நிறுத்திவிடுகின்றனர். அங்கு இருந்து பாபநாசத்திற்கு அரசு பஸ்கள், ஆட்டோக்கள் செல்கின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்புவோர் பாபநாசத்தை தவிர்க்கலாம்.அம்பாசமுத்திரம் கல்லிடைகுறிச்சி பாபநாசத்திற்கு அடுத்ததாக அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சியில் படித்துறைகள் உள்ளன. அங்கு நீரோட்டம் அருமையாக இருக்கும். தொடர்ந்து தாமிரபரணியின் ஓட்டத்தில் அத்தாளநல்லுாரில் கஜேந்திரமோட்ச தீர்த்தம் உள்ளது. தாமிரபரணியின் தீர்த்தத்தில் இன்னொரு முக்கியமான தீர்த்தம் திருப்புடைமருதுார். திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் வீரவநல்லுாரில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 
செல்லவேண்டும்.நாறும்புநாதர் கோயில்திருப்புடைமருதுாரில் ஸ்ரீ நாறும்புநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பழமையான மூலிகை ஓவியங்கள் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. அங்கு நீராட காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வியாசதீர்த்தம்

சேரன்மகாதேவி அருகே உள்ள வியாச தீர்த்தம் முக்கியமானது. நீரோட்டம் அருமையாக இருக்கும். அங்குள்ள பெருமாள் கோயில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. வாகனங்கள் நிறுத்தவும், விசாலமான படித்துறையும் உள்ளது.

ராஜவல்லிபுரம்

திருநெல்வேலியை கடந்த பின் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் ஆலயம் உள்ளது. பக்தர்களின் ஏற்பாட்டில் புதிய படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து, சீவலப்பேரி முக்கியமான தீர்த்தகட்டம். ரோட்டோரமாகவே தாமிரபரணி அமைந்துள்ளதால் கார்களில் செல்வோருக்கு எளிதாக இருக்கும். ஆனால் படித்துறை கிடையாது. அருகில் துர்க்காம்பிகா கோயில் பிரசித்தி பெற்றது.

முறப்பநாடு

தாமிரபரணியில் முக்கியமான குரு தலம் துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர் கோயில். தற்போது படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுவர்கள் குளிக்க ஏற்ற இடம். புஷ்கர விழாவில் பாபநாசத்திற்கு அடுத்து முறப்பநாடு கோயிலில் அதிகம் கூட்டம் கூடுகிறது. கார்கள் சற்று தொலையில் நிறுத்தப்படும். அங்கிருந்து நடந்து அல்லது ஆட்டோக்களில் செல்லலாம்.

வல்லநாடு அகரம்

முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது வல்லநாடு அகரம். அங்குள்ள அஞ்சேல் பெருமாள், கைலாசநாதர், தசாவதார கோயில்கள் சிறப்பு கொண்டவை. அந்த படித்துறைக்கு, நெல்லை--துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு கிராமத்திற்குள் செல்ல வேண்டும்.

முக்காணி, ஏரல் முக்காணி, ஏரல் ஆகிய இடங்களிலும் படித்துறைகள் உள்ளன. தாமிரபரணி துவங்கும் பாபநாசத்தில் இருந்து கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை 143 படித்துறைகள், 64 தீர்த்தக்கட்டங்கள், நவதிருப்பதி ஆலயங்கள், நவகைலாய கோயில்கள் உள்ளன. எனவே எந்த இடத்திலும் நீராடலாம். பாதுகாப்பு கருதி ஓரளவு பக்தர்கள் நீராடும் படித்துறைகளை தேர்ந்தெடுத்து செல்லுங்கள். கார்கள், வேன்களில் செல்வோர் நெருக்கடியில்லாத வல்லநாடு, திருப்புடைமருதுார், ஸ்ரீவைகுண்டம் போன்ற இடங்களை தேர்வு செய்யலாம்.

ஸ்ரீவைகுண்டம்

துாத்துக்குடி மாவட்டத்தின் இன்னொரு முக்கியமான படித்துறை, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே உள்ளது. தாமிரபரணியின் போக்கில் கடைசி தடுப்பணை இங்கு உள்ளதால் படித்துறையில் வசதி, பாதுகாப்பாக நீராடலாம். வாகனங்களில் வருவோர், நெல்லை- திருச்செந்துார் செல்லும் சாலையில் சென்று ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லவேண்டும்.






No comments:

Post a Comment

EWS TODAY 18.11.2024