Friday, October 19, 2018


நானும் கூட... - வக்கிரமா? ஆத்திரமா?


By கோதை ஜோதிலட்சுமி | Published on : 17th October 2018 01:38 AM |

இந்த நூற்றாண்டின்மிகப் பெரிய பிரச்னையாக முன்வைக்கப்படுவது பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், சீண்டல்கள்தான். ஆனால், இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. புராண இதிகாச காலம் தொடங்கி பெண் மீதான இந்த வன்முறை மற்றும் சீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசத்தின்போது திரெளபதி பணிப்பெண்ணாகப் பணியில் இருக்கும்போது கீசகன், அவளுக்குத் தரும் தொந்தரவுகளில் தொடங்கி காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரச்னை.
இத்தகைய பாலியல் சீண்டல்கள், கொடுமைகள், வன்முறைகள் பெண்களால் சகித்துக் கொள்ளப்பட்டு அல்லது வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. தங்கள் கல்வியைத் தொடர்வதற்கும் பணியிடத்தில் பணிசெய்வதற்கும் தொடர்ந்து அவர்கள் தங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை சில ஆண்டுகள் முன்வரை இருந்தது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. 

ஆனால், தற்போது சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகக் கடுமையாக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்து நீதித்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சட்டங்களை இயற்றியுள்ளது.

ஆனாலும் இந்தச்சட்டங்களும் போதுமானதாக இல்லை என்பது நிஜம். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன்னுடைய புகாரை காவல் நிலையத்தில் அளிக்க முன்வருவதில் இருந்து பல சிக்கல்களை
அவர்கள் சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே, பெண்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு இன்னும் முழுமையான சாத்தியத்தை எட்டவில்லை.

தற்போது சமூக வலைதளங்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த வளர்ச்சி பெண்கள் சார்ந்த பிரச்னைகளுக்காகவும் தற்போது பயன்படுத்தப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் தரனா பார்கெ என்பவர் மீ டூ (நானும் கூட) என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கம் நானும் கூட பாதிக்கப்பட்டேன் எனும் கருத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த இயக்கம் அங்கு அப்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் 2017- ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகையான அலிஸா மிலானோ இந்த மீ டூ இயக்கத்தைத் தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தங்கள் மீதான பாலியல் சீண்டல்கள், வன்முறைகள், கொடுமைகள் இவற்றைப் பெண்கள் பொது வெளியில் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில காலமாக இந்தியாவிலும் இந்த மீ டூ இயக்கம் பெருவாரியாக பெண்களின் மனக் குமுறல்களை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் பெண்கள் தங்கள் மீதான பாலியல் கொடுமைகளை முன்வைக்கும்பொழுது அவற்றில் பெரும்பாலும் பிரபலங்களை நோக்கிய பதிவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

சிலநூற்றாண்டுகள் பெண்களின் அடக்கப்பட்டிருந்த, அடைத்து வைக்கப்பட்டிருந்த குமுறலின் குரல் என்றே இந்தப் பதிவுகளை தேசம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்கள் தங்கள் மீதான வன்முறைகளை, கொடுமைகளை சகித்துக் கொண்டே ஆக வேண்டும். ஒருவேளை அவற்றை வெளிப்படுத்தினாலும் அது அந்தப் பெண்ணையே மீண்டும் தாக்கும் ஆயுதமாக மாறிவிடும் சமூகச் சூழல் நிலவிய நிலையிலிருந்து சற்றே மாற்றம் கண்டு, தற்பொழுது அவர்களின் குரலுக்கு மரியாதை கிடைக்கிறது.
அவர்கள் தங்கள் உடலியல் சார்ந்த பிரச்னைகளை, பணியிடங்களில் அவர்களுக்கு ஆண்களால் ஏற்படும் தொந்தரவுகளை, குடும்பத்தில் உறவுகளிடையே அவர்கள்சந்திக்கும் சீண்டல்களைத் துணிந்து பேசுவதற்கான களமாகவும் வாய்ப்பாகவும் இந்த இயக்கம் வாய்த்திருக்கிறது. இன்றைய சமூகச் சூழலும் சற்றே ஆரோக்கியம் அடைந்து அவற்றை செவிமடுக்கும் நிலைக்குப் பண்பட்டிருக்கிறது.
இன்றைய இளம்பெண்கள் மட்டுமே என்றில்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்தும் பெண்கள் மனம் திறந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? இதில் நீதி கிடைக்கும் என நம்புகிறார்களா? அல்லது ஆணின் மீதான தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களா? நானும் கூட என்கிற சமூக வலைதள இயக்கத்தைப் பெண்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடு என்பதா? இல்லை பழிவாங்கும் வக்கிரம் என்பதா?
எத்தனையோ காலமாக அடிமைப்படுத்தப்பட்டு தங்கள் மீதான தாக்குதல்களை வெளியில் சொல்ல இயலாமல் இருந்த பெண்கள், இப்போதேனும் நிலைமை மாறி தங்கள் மனக்குறைகளை வெளியிடுகிறார்கள் என்றுதான் இதனை பார்க்க வேண்டும் எனும் கருத்து முன் வைக்கப்படுகிறது.

இனி, பெண்கள் மீது இத்தகைய சீண்டல்களை, கொடுமைகளை செய்ய நினைப்போர் தயங்கி விலகிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகிறது. 

ஆனால், இந்த இயக்கத்தின் போக்கு எதை நோக்கிப் பயணிக்கிறது? சமூகத்தில் இதன் தாக்கம் என்ன? என்பதையும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையிலிருந்து, தனக்கு வேண்டாதவர்கள் மீது அவதூறு சொல்லும் வாய்ப்பு இதில் ஏற்பட்டுவிடுகிறது.

ஒருவரைப் பற்றி மற்றொருவர் முன்வைக்கும் கருத்துகளில் உண்மை இருக்கலாம்; உண்மை இல்லாமலும் இருக்கலாம். பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இது நிரந்தரத் தீர்வைத் தருமா என்றால் நிச்சயம் தராது. சட்ட நடவடிக்கைகள், அதற்கான வழிமுறைகள்ஆகியவையே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியுமே தவிர, இது ஓர் எச்சரிக்கை என்ற வகையில் மட்டுமே நின்றுவிட வேண்டியதுதான்.

வெறும் அவதூறு என்ற வகையில் செய்யப்படும் பதிவுகள் வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதர் தன் கடும் உழைப்பால் பெற்ற பெயர், புகழ், அந்தஸ்து இவற்றை மிக எளிதாக ஒட்டுமொத்தமாக உடைத்தெறிந்து விட முடியும். அந்த வகையில் பார்க்கும்பொழுது இத்தகைய சமூக வலைதள இயக்கம் பெரும் அச்சத்தை சமூக அளவில் ஏற்படுத்துகிறது.
ஆண்- பெண் சமத்துவம் நோக்கி நகர்வது மட்டுமே ஆரோக்கியமான வளர்ச்சிக்கான வழியாக இருக்க முடியும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நிற்பதும், பரஸ்பரம் குற்றம் சுமத்துவதும் இருபாலருக்குமே பெரும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

தவறு செய்த ஆண்களுக்கு வேண்டுமானால் இத்தகைய அவமானப்படுத்துதல் தண்டனையாக இருக்கலாம். அதே நேரத்தில் உதவி தேவைப்படும் பெண்ணுக்கு உதவுவதற்கு எந்த ஆணும் முன்வராத அச்சத்தை இது தந்துவிடக் கூடும். 

இன்றைய இந்திய சூழலில் ஒரு சதவிகித பெண்கள் கூட உயர்பதவிகளில் இல்லாத நிலையில், பணியிடங்களில் பெண்கள் தங்களோடு பணிபுரியும் ஆண்கள் மீது குற்றம் சுமத்தும் பிரச்னைகள்அதிக அளவில் ஏற்படும்பொழுது, பெண்களை அவர்கள் நிறுவனங்களில் தவிர்த்துவிடும் வாய்ப்பு அதிகம். இதனால் ஆற்றல்மிக்க பெண்களின் வளர்ச்சி தடைபடும்.
ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளை பெண்கள் முன்வைக்கும் இதே முறையை ஆண்களும் கையில் எடுத்துக்கொண்டால் சமூகக் கட்டமைப்பில் விபரீதம் ஏற்பட்டுவிடும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

எதிர் பாலினத்தை எதிரியாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை எனும் உண்மையை இரு சாராரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் புரிதலுடன் முன்னேற்றப் பாதையில் நடப்பதுதான் அடுத்த தலைமுறையின்ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்க முடியும்.
திரைப் பிரபலங்கள் சின்மயி, ஸ்ரீரெட்டி, சுசித்ரா - இவர்கள் எல்லாரும் சொல்ல விரும்புவது, இந்த நிலைக்கு நாங்கள் வருவதற்கு பல சமரசங்களுக்கு நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். அதையும் மீறித்தான் வளர்ந்திருக்கிறோம் என்பது தான். அவர்களின் பதிவுகளுக்குப் பின்னால் கோபம் இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன தீர்வு? எல்லாம் சில நாள்களுக்கோ அல்லது வாரங்களுக்கோதான். அப்புறம் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுவார்கள். சாட்சிகள், ஆதாரங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு புகார்கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஒரு பெண் தன் முயற்சியில், திறமையில் முன்னேறினாலும், இனி இந்தச் சமூகம் அவள் என்னென்ன செய்தாளோ என்ற சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.
மித்தாலி ராஜ், டாக்டர் சாந்தா, பாடகி சித்ரா என தத்தம் துறைகளில் வெற்றி பெற்ற பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இத்தகைய அத்துமீறல்களை அனுமதிக்காமல் அதே நேரத்தில் அவற்றைக் கையாளத் தெரிந்தவர்கள். மீ டூ என்ற புலம்பல்களை முன்வைக்கவில்லை. வெற்றியாளராய் தன்னை உயர்த்திக் கொள்ள தன் ஆற்றலை மூலதனமாக்கியவர்கள்.

நானும் கூட என்று பதிவிடும் பெண்கள் எல்லாம் தங்களைத் தாங்களே எப்படிப் புரிந்து கொண்டுள்ளனர்? பெண் என்பவள் ஆணை விட உடல் ரீதியில் வலிமை குறைந்தவளாக கருதப்பட்டாலும், மனரீதியாக மிகப் பெரும் வலிமை படைத்தவள்; ஆற்றலும் மனத்திட்பமும் கொண்டவள்.
பெண்ணின் மன வைராக்கியத்தை மீறி எத்தகைய பலமிக்க ஆணும் அவளை எதுவும் செய்து விட முடியாது என்பதுதானே உண்மை?
இந்தியாவின் குடும்ப அமைப்பில், ஒரு பெண்ணுக்கு அவளுடைய சகோதரர்கள், தகப்பன், கணவன் என குடும்பம் வழங்கும் பாதுகாப்பை விட பெரிய பாதுகாப்பை வேறெதிலும் கண்டுவிட முடியாது.
மீ டூ என்ற வெளிநாட்டு இயக்கம் வந்து இந்தியப் பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு நீதி செய்ய வேண்டிய அவசியமில்லை!

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...