Sunday, October 7, 2018


நாளை மகாளய அமாவாசை - முன்னோர்களை வழிபட உகந்த நாள்!



சி.வெற்றிவேல்


மகாளய தினத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியோடு பெருவாழ்வு வாழ்வோம்...

நாளை புரட்டாசி மகாளய அமாவாசை (8.10.2018). முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள். நாளை முன்னோர்களை வழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.



பொதுவாக, பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம் அமாவாசை. முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நாள்களில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி பெற்று, நமது பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. அதிலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள், சிறப்பு பெற்ற தினங்களாகும். இவற்றில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மட்டும் ’மகாளய அமாவாசை’ என்று அழைக்கப்படுகிறது.



மற்ற அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வருவதாக ஐதிகம்.

மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடித் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றைப் படைத்து வழிபடலாம். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.

மேலும் தடைப்பட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும்.

மகாளய தினத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியோடு பெருவாழ்வு வாழ்வோம்...

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024