Tuesday, October 9, 2018


விபத்துகள் தவிர்ப்போம்


By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 09th October 2018 01:33 AM 

அண்மையில் திருச்சி, சமயபுரம் அருகே இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிகாலை நேரத்தில் கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இச்சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களாக சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்தாதது, லாரி நிறுத்தப்பட்டுள்ளதற்கான எச்சரிக்கை விளக்குகள் இல்லாதது, கார் ஓட்டுநர் ஓய்வின்றி தொடர்ச்சியாக பயணம் செய்தது என்று சொல்லப்படுகிறது. 

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 4.60 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 1.46 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் 48,746 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2014-ஆம் ஆண்டு இது 40,950-ஆக இருந்தது. 

சாலை விபத்துகளில் பலியானவர்களின் சராசரி வயதைக் கணக்கிட்டால், 18 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தான். இந்த வயதில் உள்ளவர்கள் மட்டும் 68.6 சதவீதம் அதாவது 1,03,409 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
அதே போல், 2014-ஆம் ஆண்டு சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது 12,330-லிருந்து இப்போது 20,457-ஆக, 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி தினமும் 56 பாதசாரிகள் வரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள். 

மிதிவண்டியில் செல்வோர் உயிரிழப்பு 2014-ஆம் ஆண்டில் 4,037 என இருந்தது, அது தற்போது 3,559 என குறைந்துள்ளது. மிதிவண்டியை பயன்படுத்துவோர் அரிதாகி விட்டதால் இந்த உயிரிழப்பு சற்று குறைந்துள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழப்பு மற்றும் பாதசாரிகள் உயிரிழப்பு என இரண்டிலுமே இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது என சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 6,329 பேர் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 2-வது இடத்தில் உத்தரப் பிரதேசமும் (5,699 பேர்), 3-வது இடத்தில் மகாராஷ்டிரமும் (4,659 பேர்) உள்ளன.
அதே போல கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3,507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 2-வது இடத்தில் மகாராஷ்டிரமும் (1,831 பேர்), 3-வது இடத்தில் ஆந்திரமும் (1,379 பேர்) உள்ளன. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவது தான்.

சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் அதிகம் விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து சாலை வடிவமைப்புகளை மாற்றினாலும் தொடரும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை 

வாகனங்களின் பெருக்கம் என்பது ஒரு புறம் இருந்தாலும் சாலை விதி மீறல்கள், சாலை நெரிசல், மன உளைச்சல், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாத மனோபாவம், குறுகலான பாதைகளில் வேகமாக செல்லுதல், கவனக் குறைவாக வாகனங்களை ஓட்டுவது, நீண்ட நேரம் தூங்காமல் இரவு நேரங்களில் வேகமாக வாகனங்களை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, தரமற்ற சாலைகள் ஆகியவையே இத்தகைய சாலை விபத்துகளுக்குக் காரணமாக இருக்கின்றன.
சாலையில் ஓரமாக செல்லும் பாதசாரிகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் சாலை ஆக்கிரமிப்புதான். அதாவது, கடைகள், வாகனங்கள், சாலையோர நடைபாதை கடைகள் மக்கள் நடக்க வழியில்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அவர்கள் சாலையில் இறங்கி ஆபத்தை எதிர்நோக்கி நடந்து தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களில் 133 பேரும், சைக்கிளில் செல்பவர்களில் 10 பேரும் தினமும் உயிரிழக்கின்றனர்.
அதாவது, இரு சக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் உயிரிழப்பு மொத்த விபத்து உயிரிழப்பில் பாதியாக உள்ளது. எனவே, சாலையோரங்களை விரிவுபடுத்த வேண்டியது இப்போது அவசியமாகி வருகிறது. 

இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் அதிகளவில் உயிரிழப்பதற்குக் காரணம் பொது போக்குவரத்தை அலட்சியம் செய்வதுதான். வாகனத் தேவையைக் கட்டுப்படுத்தவும், சாலை நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் பொது போக்குவரத்து பேருதவியாக இருக்கிறது.
பொது போக்குவரத்து பாதுகாப்பானதாகவும் குறைந்த விலையில் நிறைந்த சேவை உடையதாகவும் இருக்கிறது. எனவே, பொது போக்குவரத்தில் சென்றால் வீணான அச்ச உணர்வு அகற்றப்படுவதோடு, எரிபொருள் செலவும் இல்லை, கட்டணமும் குறைவு என்ற உணர்வை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டும்.

நாம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைப்பதோடு, அது வளரிளம் பருவத்தினரிடையே ஆளுமை பண்பையும் வளர்க்க உதவுகிறது. 

அதாவது, பேருந்துகளில் பயணிக்கையில் பல்வேறு மனிதர்களுடன் உரையாடுவதன் மூலம் சமூகத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அனுபவம் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குக் கிடைப்பதில்லை. மேலும், அவர்கள் அச்சவுணர்வுடனேயே தான் வாகனங்களை ஓட்ட வேண்டியுள்ளது.
நாம் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தப் பழகினால் மட்டுமே சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும். 

எரிபொருள் செலவு விண்ணை முட்டும் இவ்வேளையில் பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்துவோம்; சாலை விபத்துகளைத் தவிர்ப்போம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024