Saturday, October 6, 2018


மகனை பார்க்க மனவேதனை அதிகமாகிறது : கருணை கொலைக்கு மனு அளித்த தந்தை கண்ணீர்

dinamalar 06.10.2018



கடலுார்: 'ஒருவேளை சாப்பாடு ஊட்டுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். 20 முறைக்கு மேல் வலிப்பு ஏற்படுவதைப் பார்க்கும் போது, நாளுக்கு நாள் மன வேதனை அதிகமாகி, கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு, கோர்ட்டில் மனு அளித்தோம்' என, மூளை செயல்திறன் பாதித்த சிறுவனின் தந்தை கூறினார்.

கடலுார் மாவட்டம், திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமேனி, 48; டெய்லர். இவரது மனைவி சசிகலா, 43; தம்பதிக்கு, 14 - 15 வயதில், இரண்டு மகள்கள் உள்ள நிலையில், 3வதாக பாவேந்தன், 10, என்ற மகன் உள்ளார்.பாவேந்தன் பிறந்தது முதல், மூளை வளர்ச்சியின்றி வளர்ந்து வரும் நிலையில், கருணைக் கொலை செய்வதற்காக, பெற்றோர், சென்னை ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர்.பாவேந்தன் தந்தை திருமேனி, நமது நிருபரிடம் கூறியதாவது: கடந்த, 2008ம் ஆண்டு என் மனைவி சசிகலா கர்ப்பம் ஆனது முதல், காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்து வந்தோம்.அதில், 3 - 5 - 7 மாதம், பிரசவத்திற்கு முன்பாக, 22 நாட்களில் என எடுக்கப்பட்ட அனைத்து ஸ்கேன் அறிக்கையிலும் குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், மூளை செயல்பாடு என, அனைத்தும் நன்றாக இருப்பதாக கூறினர்.

அதே ஆண்டு செப்., 29ல், பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தோம். மறுநாள், 30ம் தேதி, பாவேந்தன் பிறந்தான். குழந்தை பிறந்ததும், அழவில்லை. மருத்துவமனை நிர்வாகம், அதை பொருட்படுத்தாமல், பிரசவித்த, 18 மணி நேரத்தில், 'டிஸ்சார்ஜ்' செய்து அனுப்பி விட்டது. பிரசவத்தின் போது, குழந்தை தலையில் கிளிப் மாட்டி இழுத்தபோது, குழந்தையின் மூளைக்குச் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டது, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்துள்ளது.அதை மறைப்பதற்காக, மருத்துவமனை நிர்வாகம், பிரசவம் பார்த்த, 18 மணி நேரத்திற்குள், டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிய விபரம் தெரிந்தது.

மருத்துவமனையில் இருந்து வந்ததும், அன்று இரவு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இது பற்றி மருத்துவமனையில் கேட்டபோது, 'பிரசவம் பார்ப்பது மட்டும்தான் எங்கள் வேலை; வலிப்பு வந்தால் குழந்தை நல மருத்துவரிடம் காண்பியுங்கள்' என கூறி, அனுப்பி விட்டனர். அதன்பின், குழந்தையை சிதம்பரம், கடலுார், ஜெயங்கொண்டம், கும்பகோணம், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை என, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்தும், பலன் அளிக்கவில்லை.அவனால் எழுந்து உட்கார முடியாது; உட்கார வைக்கவும் முடியாது. 

படுத்த படுக்கைதான். ஒருவேளை சாப்பாடு ஊட்டுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஒரு நாளைக்கு, 20 முறைக்கு மேல் வலிப்பு நோய் ஏற்படும். எங்களைக்கூட யார் என அவனுக்கு தெரியாது.இதுபோன்ற நிலையில், நாளுக்கு நாள் அவனைப் பார்ப்பதற்கு எங்களுக்கு மனவேதனை அதிகமாகிறது. தொண்டு நிறுவனங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர். எங்களைப் போன்று பார்த்துக் கொள்வரா என்ற சந்தேகம் உள்ளது. மேலும், எங்களுக்குப் பின், அவனை பார்த்துக் கொள்வது யார் என்ற கேள்வி எழுந்ததால், கருணை கொலைக்கு அனுமதி கோரி, ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024