'ரெட் அலர்ட்' வாபஸ் கன மழை நீடிக்கும்!
dinamalar 07.10.2018
சென்னை: புயல் சின்னம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் - கேரளாவின் எல்லை மாவட்டங்களில், 20 செ.மீ., அளவுக்கு, இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை, வாபஸ் பெறப்பட்டுஉள்ளது.
திடீர் மாற்றம் : நாட்டின் முக்கிய பருவ மழையான, தென்மேற்கு பருவமழை, மே, 29 முதல், நாடு முழுவதும் கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழை, இறுதி கட்டத்தில், அரபி கடலில் புயலாக மாறியுள்ளது. கன்னியாகுமரிக்கு தென் மேற்கே, லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் உருவானது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுப்பெற்று வருகிறது. இந்த மண்டலம், நாளை புயலாக மாறி, வட மேற்கில், ஓமன் நாட்டை நோக்கி நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில், திடீர் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக, அனைத்து மாவட்டங் களிலும், பரவலாக மழை கொட்டியது. இன்று பிற்பகலிலும், மாலையிலும், சில இடங்களில் கன மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாளையும், சில இடங்களில் கன மழை பெய்யும்.
கேரளாவிலும், அம்மாநிலத்தை ஒட்டிய, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும், கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில், 21 செ.மீ.,க்கு மேல் பேய் மழை பெய்யும் என்ற கணிப்பும், அதைத் தொடர்ந்துவிடப்பட்ட, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், நேற்று வாபஸ் பெறப்பட்டது.
'ஆரஞ்ச் அலர்ட்' : அதேநேரத்தில், 21 செ.மீ., அளவுக்குள், மழை பெய்யும் என்பதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.''இந்த மழையின் காரணமாக, பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். சில இடங்களில் மட்டுமே, கன மழை கொட்டும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய, துணை இயக்குனர் ஜெனரல், எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், புதுச்சேரியின் காரைக்காலில், அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், விழுப்புரம், 9; குன்னுார், 8; நெய்வேலி, மயிலம், மயிலாடுதுறை, 7; மேட்டுப்பாளையம், பண்ருட்டி, நீடாமங்கலம், காஞ்சிபுரம், வானுார், 6; கடலுார், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கோத்தகிரி, பாபநாசம், கேத்தி, பெருங்கொண்டபுரம், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.புதுச்சேரி, திருக்கோவிலுார், சீர்காழி,உளுந்துார்பேட்டை, செஞ்சி, ராமநாதபுரம், திண்டிவனம், சிதம்பரம், ஊட்டி, நன்னிலம், சங்கராபுரம், ஸ்ரீமுஷ்ணம், உத்திரமேரூர் மற்றும் செங்கம், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை நாளை துவக்கம் :
நான்கு மாதங்களாக நீடித்த, தென்மேற்கு பருவமழை, இன்றுடன் விலகுகிறது. 'வடகிழக்கு பருவமழை, நாளை துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், சென்னைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இது, புயலாக மாறுவதற்கு, 70 சதவீதம் சாத்தியம் உள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின், புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினாலும், காற்றழுத்த மண்டலமாகவே நீடித்தாலும், ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவுக்கு தான், கன மழையை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'வடகிழக்கு பருவமழை துவங்கினாலும், 14ம் தேதி வரை, சென்னைக்கு அதிக மழை வாய்ப்பு இல்லை. அடுத்த வாரம் முதல், சென்னையில் மழை பெய்யத் துவங்கும்' என, தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம், எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment