Sunday, October 7, 2018

மகாபுஷ்கர விழாவிற்கு தயாராகவில்லை தாமிரபரணி

Added : அக் 07, 2018 00:21 |



நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணியில் மகாபுஷ்கர விழாவிற்காக, தனியார் அமைப்புகள் மூலம் ஏற்பாடுகள் வேகமாக நடக்கின்றன. ஆனால், தாமிரபரணியில் கலக்கும் சாக்கடைகளை நிறுத்தவும், குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் அரசு இன்னம் முயற்சிக்கவில்லை.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் போது, அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. விருச்சிக ராசியில், குருபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி விருச்சிக ராசிக்கான புண்ணிய நதியான, தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.144 ஆண்டுகளுக்கு பின், இத்தகைய விழா கொண்டாடப்படுவதால் மகாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி துவங்கும் பாபநாசம் முதல், துாத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை இருகரைகளிலும், 149 தீர்த்தங்கள் உள்ளன. அந்த படித்துறைகளில், 20க்கும் மேற்பட்ட படித்துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சிகள், பூஜைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தாமிரபரணி துவங்கும் இடமான, பாபநாசம் சிவன் கோவில் முன் உள்ள, படித்துறைகளில் சிறப்பு பூஜைகளை மேற்கொள்ள, சிருங்கேரி மடத்தின் சார்பில் ஏற்பாடுகள் நடக்கின்றன. பாபநாசத்தில், 12ம் தேதி நடக்கும் விழாவில், தாமிரபரணி புஷ்கர விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார். அவர் நதிக்கரையில், நெல்லை ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். அக்., 12 முதல், 22 வரை தினமும் ஏராளமானோர், தாமிரபரணியில் புனித நீராடலுக்கு வர உள்ளனர். சைவ, வைணவ மடங்களின் பல்வேறு மடாதிபதிகளும், ஜீயர்களும் புஷ்கர விழாவில் பங்கேற்கின்றனர்.

தயார் நிலையில் :

நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில், பாபநாசம், கல்லிடைகுறிச்சி, அத்தாளநல்லுார், திருப்புடைமருதுார், முக்கூடல், திருவேங்கநாதபுரம், குறுக்குத் துறை சுப்ரமணியசுவாமி கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், மணிமூர்த்தீஸ்வரம், ஜடாயு தீர்த்தம், செப்பறை அழகியகூத்தர் கோவில், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், முக்காணி ஆகிய இடங்களில் படித்துறைகள் சீர்செய்யப்படுகின்றன. அதிக மக்கள் திரளும் இடம் என்பதால், அங்கு பந்தல்கள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பக்தர்கள் எதிர்பார்ப்பு : தாமிரபரணியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கர விழா கொண்டாடப்பட்டுள்ளது. 2006ல், தி.மு.க., ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர்,ஆவுடையப்பன். இவரது சொந்த தொகுதி பாபநாசம். எனவே, அவர் தலைமையில் விழா நடந்துள்ளது. ஆனால், தற்போது மத்தியில், பா.ஜ., அரசு இருப்பதால், விழாவிற்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் ஆர்வம் காட்டுவதால் இதை ஓர் அரசியல் விழாவாக பார்க்கும், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதனால் அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை.குறிப்பாக திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள குறுக்குத்துறை கோவில், தைப்பூச மண்டபத்தில் நடக்கும் நீராடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மணிமூர்த்தீஸ்வரம், ஜடாயு தீர்த்தம் ஆகியவற்றில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்போது, நகரில்போக்குவரத்தை சீர்செய்யவும், வாகன நிறுத்தும் இடங்களை ஏற்பாடு செய்யவும், இதுவரையிலும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. மேலும் லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற தேவைகளுக்கும், இன்னமும் ஏற்பாடுகள் நடக்கவில்லை.நெல்லை தாமிரபரணி ஆற்றில், பல இடங்களில் நேரடியாக சாக்கடை, கழிவுநீர் கலக்கிறது. அதை புஷ்கர விழாவிற்கு முன்பாக, சுத்தம் செய்து தற்காலிக தடுப்பு ஏற்படுத்துவோம் என, நகராட்சிகளின் ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். விழாவிற்கு, சில தினங்களே உள்ள நிலையில், இதுவரையிலும் எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை. எனவே அரசும், அதிகாரிகளும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024