மும்பை பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 7 வண்ண (ரெயின்போ) மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை, நாட்டிலுள்ள பிற பல்கலைக்கழகங்களும் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) யோசனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மும்பை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இளநிலை கலை - அறிவியல், பொறியியல் பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டப் படிப்புகள் என அனைத்துப் படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களிலும் வலது புறத்தில் மாணவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.
மேலும், ஏழு வண்ணங்களுடன், ஏழு பாதுகாப்பு குறியீடுகளை உள்ளடக்கியதாகவும் இந்த மதிப்பெண் சான்றிதழ்களை மும்பை பல்கலைக்கழகம் தயாரித்து வழங்குகிறது.
இவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை, போலியாக உருவாக்குவது கடினம்.
எனவே, யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றினால், போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பதைத் தடுக்க முடியும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை பொறியியல் பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டச் சான்றிதழ்கள், ஒரு சில கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் கலை, அறிவியல் பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், சில கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment