சென்னை மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று வடகிழக்கு பருவமழையும் தொடங்கியது. சென்னையில் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை வரை இடி–மின்னலுடன் மழை விட்டு, விட்டு பெய்தது.
சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மைலாப்பூர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், பெரம்பூர் என சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால், மாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கொட்டும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகே 35 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனை, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் விழுந்த மரத்தையும், திருமங்கலம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் காரின் மீது விழுந்த மரம் ஒன்றையும் தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.
அதேபோல சென்னை புறநகர் பகுதி முழுவதும் நேற்று காலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் இடி–மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
பரங்கிமலை, பழவந்தாங்கல், தில்லைகங்கா நகர் ஆகிய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. அவை உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. உள்ளகரம், ஆயில் மில் பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழ்கட்டளை பகுதியில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. சில இடங்களில் சாலையோர மரங்கள் விழுந்தன. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பட்டாபிராம், திருநின்றவூர், ஆவடி, திருமுல்லைவாயல், கோயில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே விடாமல் கனமழை பெய்தது. பட்டாபிராம் மேம்பாலம் அருகே சாலைகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, நசரத்பேட்டை, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் மதியம் 12 மணி முதல் பலத்த மழை கொட்டியது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. கடற்கரையில் பலத்த காற்று வீசியதால் 500–க்கும் மேற்பட்ட கட்டுமரம், பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. மாலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அம்பத்தூர், கல்லிகுப்பம், முகப்பேர், திருமங்கலம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு லேசான மழையும், மாலையில் சுமார் 1½ மணிநேரம் கனமழையும் பெய்தது. செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
No comments:
Post a Comment