பொதுவாக உலகம் முழுவதிலும் கோடைகாலத்திலும், விடுமுறை நாட்களிலும் ரம்மியமான சீதோஷ்ண நிலையுள்ள இடங்களை மக்கள் தேடிச்செல்வது வாடிக்கை. அப்படி ஜனநாயகத்தில் ரம்மியமான சூழ்நிலை, ஆனந்தக்காற்று வீசும் ஒரு நாடு என்றால் நிச்சயமாக அது இந்தியாதான் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ளலாம். அந்த வகையில், ஜனநாயகத்தின் ஆணிவேர்களாக மத்தியில் பாராளுமன்றமும், மாநிலங்களில் சட்டமன்றங்களும் விளங்குவதற்கான பாதையை அரசியல் சட்டத்தில் வகுத்துக்கொடுத்துள்ளனர். மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்து வதற்காக நாடு முழுவதிலும் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் களால் மத்திய அரசாங்கமும், சட்டமன்ற உறுப்பினர்களால் அந்தந்த மாநில அரசாங்கங்களும் நிர்வாகத்தை நடத்துகின்றன. அந்த வகையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவை என்று கூறப்படும் மேல்–சபையில் 250 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இதுபோல, அந்தந்த மாநிலத்தின் பரப்பளவை கருத்தில் கொண்டு சட்டசபை தொகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. 18 மேல்–சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். புதுச்சேரிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். தமிழக சட்டசபையைப் பொருத்தமட்டில், 234 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
நாடு முழுவதிலும் பல இடங்களில் பொதுக் கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள்போல, பல இடங்களில் இன்னாரின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்டது, இன்னாரின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்டது என்ற கல்வெட்டுகள், போர்டுகள் அவர்களின் புகழை பறைசாற்றிக்கொண்டு இருக்கும். இதுபோன்ற பணிகளுக்காக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக்கு ரூ.5 கோடி மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தன்னுடைய 5 ஆண்டுகால பதவிகாலத்தில் மத்திய அரசாங்க துறைகள் நிறைவேற்றும் பணிகள்தவிர, தான் விருப்பப்பட்ட மக்கள் வளர்ச்சி பணிகளை ரூ.25 கோடி செலவில் நிறைவேற்ற முடியும். மேல்–சபை உறுப்பினர்கள் ரூ.30 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ளமுடியும். இதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்குகிறது. அவர்களும் தங்கள் பதவி காலமான 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி அளவுக்கு தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்காக தன் விருப்பத்தின் அடிப்படையில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளலாம். பலர் இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவழிப்பதில்லை என்ற குறையும் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒரு திட்டத்தை அறிவித்தார். இதன்படி, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தன் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்து, அந்த கிராமத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன் தொகுதி மேம்பாட்டுதிட்ட நிதியின்கீழ் செலவழிக்கலாம். தான் சொன்னதை வெறும் அறிவிப்பாக விட்டுவிடாமல், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளன்று தொடங்கியும் வைத்துவிட்டார். சட்டமன்ற உறுப்பினர்களும் இதுபோல தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஆண்டுக்கு ஒரு கிராமத்தை மாதிரி கிராமமாக தத்து எடுக்கும் ஆலோசனையையும் மாநிலங்களுக்கு கூறியுள்ளார். இந்த நல்ல யோசனையை மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். அரசுகளின் கிராம மேம்பாட்டு திட்டங்களின் செயலாக்கத்தோடு இவ்வாறு மாதிரி கிராமங்கள் தத்து எடுப்பதை மற்றவர்களையும் எடுக்க சொல்வதற்கான முயற்சிகள் அரசுகள் சார்பில் எடுக்கப்படவேண்டும். ஆளுக்கு ஒரு மாதிரி கிராமத்தை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் மாவட்ட, தாலுகா அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், திருக்கோவில்கள், மதங்களின் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தத்து எடுத்தால், இந்தியா முழுவதிலும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் தத்து எடுக்கப்பட்டு அனைத்து வசதிகளையும் பெற்று தன்னிறைவு அடையப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment