சமீபத்தில் மறைந்த நாடக ஆசான் வி.எஸ்.ராகவனைப் பற்றி நினைக்கும்போது ஒரு ரங்கோலி கோலமாய் நினைவுகள் பளீரிடுகின்றன.
நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் திரு.வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க் ஆனது. அதனால் அவர் பேசும் வசனங்கள், சாகா வரம் பெற்றன!
மிமிக்ரி கலைஞர்கள் உண்மையாகவே ரசித்து லயித்து வி.எஸ்.ஆரின் குரலைப் பிரதிபலிப்பார்கள். எப்படி வாரியாருக்கு “ மகனேய்ய்ய்.. ‘ என்கிற கீச்சுக்குரல் இழுப்பு, முத்திரை ஆனதோ அதேபோல் வி.எஸ். ஆருக்கு “ ஷொல்லுங்க” அவருக்குச் ‘சா’வே வராது! ஷா தான் என்று நினைத்திருந்தோம். காலன் கணக்கு வேறு மாதிரியாக இருந்துவிட்டது. இறுதியில் அவருக்கு ‘சா’ வந்துவிட்டது!
எண்ணற்ற பாத்திரங்களில் அவரைப் பார்த்த தலைமுறை எங்களுடையது. ஜாம்பவான்களாக இருந்த சிவாஜி, எம்.ஜி. ஆர்., ஜெமினி போன்றோரின் படங்களில் அவர் ஒரு இன்றியமையாத இணைப்பு. லேசான தலையாட்டலுடன் அவர் சொன்ன “பிள்ளைவாள் ” இன்னமும் சிதம்பரனாரை நம் கண் முன் நிறுத்துகிறது.
அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்ற கறுப்பு வெள்ளை திரைப்படக் காலங்களில், சரியான போட்டி இருந்தது. ஒரு பக்கம் எஸ்.வி. ரங்கா ராவ். இன்னொரு பக்கம் எஸ்.வி. சுப்பையா. அவர்களையும் சமாளித்து, தனக்கென ரசிகன் கவனத்தைத் திருப்பிய நடிகர்தான் எஸ்.வி.யைத் திருப்பிப் போட்ட வி.எஸ்.ராகவன்.
மத்தியதரக் குடும்பக் கதைகளை கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகுத் திறம்பட சொல்லிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் நடிகர் பட்டியலில் எப்போதும் வி.எஸ். ஆருக்கு ஒரு இடம் சாஸ்வதம்.
நாடகம் தந்த நல்முத்து
சதுரங்கம் என்கிற நாடகம் வி.எஸ். ஆரின் கலை வாழ்வில் முக்கியமானது. மேடை நாடகத்தில் முதன் முறையாகத் தமிழில் ஒரு செட் நாடகம் போட்டவர் அவர்தான். ஆனாலும் கதைப் பின்னலும் பாத்திரங்களின் குணாதிசயமும் ரசிகனைக் கட்டிப் போட்ட காலம் அது. ஒரே அறையின் பின்புலத்தில் ரசிகனை இருக்கையில் இருத்தி வைக்கும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. அதில் தைரியம் வந்துதான் பாலசந்தர் ‘எதிர்நீச்சலையே’ மேற்கொண்டார்.
தமிழில் அக்ஷர சுத்தமாகப் பேசும் வி.எஸ். ஆர். ஆங்கிலத்தில் அபாரப் புலமை பெற்றவர். கேம்பிரிட்ஜா/ ஆக்ஸ்போர்டா? என்பார்கள் அந்தக் காலத்தில் கிண்டலாக. அந்த மாதிரி ஒரு ஆங்கிலேயே உச்சரிப்புடன் அக்மார்க் சுத்தத்துடன் அவரது ஆங்கிலம் வெளிப்படும். வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமே அதன் உட்பொருளை விளக்கிவிடும்.
வி.எஸ். ஆர் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள வெண்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து முடித்த பின்பு புரசைவாக்கத்தில் இருந்த அவரது சகோதரியின் வீட்டில் வசித்தபடி அவர் வேலை தேட ஆரம்பித்தபோது அவருக்கு 17 வயது.
பலருக்கும் தெரியாத தகவல் ஒரு பத்திரிகையாளராகத்தான் அவர் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது. எழுத்தாளர் துமிலன்( ந. ராமசாமி) நடத்தி வந்த ’ மாலதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். அந்தப் பத்திரிகை மூடப்பட்டபிறகு அவரது எழுத்தாற்றல் அவரை நாடகத்துறைக்கு இழுத்துச் சென்றது.
1954-ல் ’ இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நாடகக் குழுவை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் ஒருவர்தான் கே. பாலசந்தர். அவரது தொடக்க கால நாடங்களில் பெரும்புகழ் பெற்றது ’ வைரமாலை’. அதன் வெற்றியால் பின்னர் அது திரைப்படமானபோது நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் வி. எஸ். ராகவன் நடித்தார். அதுவே அவரது முதல் படம். அதன்பிறகு அவர் இல்லாத படமே இல்லை என்ற நிலை உருவானது.
நாகேஷின் நண்பர்
நாகேஷின் நெருக்கமான நண்பர் வி.எஸ்.ஆர். பொது இடங்களில், சுப நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்கள். ஒரு கொடியில் இரு மலர்கள். நாகேஷ் சட்டென்று எல்லோரையும் சிநேகிப்பார். வி.எஸ்.ஆர். அப்படியல்ல. ஒரு நோட்டம் விடுவார். மெல்ல ஆளை பார்வையாலேயே எடை போடுவார். பிடித்திருந்தால் மட்டுமே கை நீட்டுவார். இதை நான் சிவாஜியிடமும் பார்த்திருக்கிறேன். இருவரையும் ஸ்பரிசித்த பெருமை என் கரங்களுக்கு உண்டு!
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நண்பன் எஸ்.வி.சேகரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் நாகேஷையும் வி.எஸ்.ஆரையும் சந்தித்தேன். அவர் பக்கத்தில் என்னை அமர வைத்தனர். தன் பெரிய கண்களை அகல விழித்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ சார் என் பேர் சிறகு இரவிச்சந்திரன்.. ஒரு இலக்கிய சிற்றிதழ் நடத்திக்கிட்டிருக்கேன்.” என்றேன். கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். “ எங்கே இருக்கேள்? நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். எனக்கு உங்க பத்திரிகையோட ஒரு பிரதி அனுப்புங்கோ! நான் இப்போ வீட்ல சும்மாத்தான் இருக்கேன்.. படிச்சுட்டு ஷொல்றேன்” என்றார்.மற்றொரு திருமண வைபவத்தில் சந்தித்தபோது மறக்காமல் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டார்.
“ சிறகு வந்தது.. படிச்சேன். நன்னாருக்கு.. தொடர்ந்து பண்ணுங்கோ “
ஒரு சிற்றிதழ் ஆசிரியனுக்கு உற்சாக டானிக் பாராட்டுதானே!
கட்டுக்கோப்பை விரும்பிய கலைஞன்
அடிப்படையில் நானும் ஒரு மேடை நாடக நடிகன் / எழுத்தாளன் என்பதால் வி.எஸ். ஆர். குழுவின் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவரது நாடகக் குழுவில் மாற்று நடிகர்கள் என்ற ஏற்பாடே கிடையாது.
சாக்கு போக்கு சால்ஜாப்பு எல்லாம் வி.எஸ்.ஆரிடம் செல்லாது. அதேபோல் நடிகர்களுக்குத் தோதாகத் தேதிகளை மாற்றும் வேலையும் அவரிடம் பலிக்காது. அந்த நாடகம் பல காட்சிகள் போடப்பட்டு இனிமேல் காட்சிகள் இல்லை என்கிற நிலையில்தான், அவரது குழு கலைஞர்கள் வேறு நிகழ்வுகளுக்குச் செல்ல முடியும்.
ஒரு முறை அவரது நாடகத்தில் நடித்த ஒரு இளம் நடிகை, இனிமேல் அவர் நடித்துக் கொண்டிருந்த வி.எஸ்.ஆரின் நாடகம் போடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் புதிய நாடகக் குழுவுக்குத் தன் தேதிகளைக் கொடுத்து விட்டார். புதிய நாடகம் மியூசிக் அகாடமியில்.. மாலை ஆறு மணிக்கு வி.எஸ்.ஆர். அந்த புதிய குழுவின் ஒப்பனை அறைக்கு வெளியே நின்றுகொண்டு அதன் தயாரிப்பாளரை வெளியே வரச் சொல்கிறார்.
“ என் ட்ரூப் ஒரு குடும்பம் மாதிரி… நீ ஆசை காட்டி என் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து விட்டாய் “ என்கிற ரீதியில் சரமாரியாக ஆங்கிலத்தில் சதிராடுகிறார். கடைசியில் ஒரு தகப்பனின் சோகத்தோடு அவர் அகன்ற காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. “ இனிமே நான் நாடகம் போட மாட்டேன்! அந்தப் பாவம் உன்னைத்தான் சேரும்” சாபத்தோடு முடிகிறது சர்ச்சை! இவ்வளவு ரகளைக்கும் காரணமான அந்த நடிகை உள்ளேயிருந்து வெளியே வரவே இல்லை.
வார்த்தையை ஒரு ஒப்பந்த சாசனமாகவே எண்ணி வாழ்ந்தவர் வி.எஸ்.ஆர். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பவர் அவர். காலை படப்பிடிப்புக்கு வந்து விட்டால் எந்த வித சோர்வும் வெறுப்பும் இன்றித் தன் வேடம் வரும் காட்சிக்காகக் காத்திருப்பதில் அவருக்கு அலுப்பே இருந்ததில்லை. அதற்குக் காரணம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு!
படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: tamizhsiragu@gmail.com