Tuesday, April 7, 2015

சிக்கல்களை தவிர்க்க‌ வங்கிகளில் ஆதார் எண்ணை பதிவு செய்வது அவசியம்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் எண்களை ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை, எந்தவித அசவுகரியங்களும் இல்லாமல் சமர்ப்பிக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

க‌டந்த ஆண்டு நவம்பர் மாதம், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட இணையம் வழி சமர்ப்பிக்கும் `ஜீவன் பிரமான்' எனும் டிஜிட்டல் ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இதன் காரணமாக, வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க நேரடியாக வங்கிக்கோ அல்லது ஓய்வூதிய பட்டுவாடா முகமைக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் வீடுகள் அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களில் இருந்து இணையம் வழியாகவே சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு எண் ஆகியவற்றை இணைக்கும் போது, ஆள்மாறாட்டத்தையும் தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தற்சமயம் 50 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024